பாகூரில் 4-ஆவது முறையாக தனியார் பேருந்தின் கண்ணாடி உடைப்பு

 பாகூர் அருகே தனியார் பேருந்து மீது தொடர்ந்து 4-ஆவது முறையாக கல் வீசி தாக்கி, கண்ணாடி உடைக்கப்பட்டது.

 பாகூர் அருகே தனியார் பேருந்து மீது தொடர்ந்து 4-ஆவது முறையாக கல் வீசி தாக்கி, கண்ணாடி உடைக்கப்பட்டது.
புதுச்சேரியிலிருந்து பாகூர் வழியாக கரையாம்புத்தூருக்கு 
செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்து சென்றது. பாகூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பகுதி அருகே சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென பேருந்து மீது கற்களை வீசினர். இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயமில்லை.
முன்னதாக, கடந்த மாதத்தில் இருந்து இதே தனியார் பேருந்தை பாகூர் அருகே உள்ள தனியார் பொறியியல் அருகே 2 முறையும், மணமேடு பகுதியில் ஒரு முறையும் மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கி, கண்ணாடியை உடைத்தனர்.
தற்போது 4-வது முறையாக பேருந்து மீது கல் வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, 
அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பேருந்தில் பயணம் செய்தவர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதேபோல, அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றன.
இதுகுறித்து தகவலறிந்த பாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் நிகழ்விடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பேருந்து மீது கல் வீசிய மர்ம நபர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. 
செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து புதன்கிழமை காலை வரை அந்த தனியார் பேருந்து இயக்கப்படாததால், கரையாம்புத்தூரில் இருந்து பாகூர் வழியாக புதுச்சேரிக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் அவதியடைந்தனர். இதையடுத்து, போலீஸார் கேட்டுக்கொண்டதின்பேரில், புதன்கிழமை காலையில் தனியார் பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com