புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசிக் கொலை

புதுச்சேரி காலாப்பட்டில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டார்.



புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டார்.
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு, தேரோடும் வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (48). அந்தத் தொகுதி காங்கிரஸ் செயலரான இவர், தனியார் மருத்துவத் தொழிற்சாலையில் தண்ணீர் லாரி ஒப்பந்ததாரராக இருந்து வந்தார்.
இந்த நிலையில், தமிழகப் பகுதியான கீழ்ப்புத்துப்பட்டில் உள்ள அவரது நண்பர் பார்த்திபனின் மனைவி ஞாயிற்றுக்கிழமை காலமானார். 
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சந்திரசேகர் அவரது மனைவி சுமலதாவுடன் மஞ்சக்குப்பத்தில் இருந்து திங்கள்கிழமை காலை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனை எதிரே சென்ற போது, எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், திடீரென சந்திரசேகரை வழிமறித்து வெடி குண்டை வீசினர். இதில், சந்திரசேகரும் அவரது மனைவி சுமலதாவும் பைக்கிலிருந்து நிலைதடுமாறிக் கீழே விழுந்தனர். 
அப்போது, அந்தக் கும்பல் சந்திரசேகரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது. இதில், சந்திரசேகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அகன்ஷா யாதவ், காவல் கண்காணிப்பாளர் மாறன் ஆகியோர் தலைமையிலான காலாப்பட்டு போலீஸார் அங்கு வந்து, சந்திரசேகரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்ப நாயும், வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஜோசப் கடந்தாண்டு ஜூலை மாதம் வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கிய எதிரியாகச் சேர்க்கப்பட்ட சந்திரசேகர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புத்துப்பட்டு மஞ்சக்குப்பத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், ஜோசப் கொலைக்குப் பழிக்குப் பழியாக சந்திரசேகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com