வணிகர்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு: இந்திய வணிகர்கள் சம்மேளனம்

வணிகர்களின் கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் வாக்களிப்போம் என்று அகில

வணிகர்களின் கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் வாக்களிப்போம் என்று அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலர் பிரவின் கன்டேல்வால் தெரிவித்தார்.
அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய நிர்வாகக் குழுவின் இரண்டு நாள் கூட்டம் புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் புதன்கிழமை தொடங்கியது.
கூட்டத்துக்குப் பிறகு, அகில இந்திய வணிகர்கள் சம்மேளன பொதுச் செயலர் பிரவின் கன்டேல்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வணிகர்களின் முக்கிய கோரிக்கைகளை வியாழக்கிழமை (ஏப்.4) வெளியிட்டு அனைத்துக் கட்சியினருக்கும் அனுப்ப உள்ளோம்.
வணிகர்களின் கோரிக்கைகளை எந்தக் கட்சி நிறைவேற்றும் என உறுதி அளிக்கிறதோ அந்தக் கட்சிக்கு ஒட்டுமொத்த வணிகர்களும் வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
37 கோடி வணிகர்கள் மற்றும் ஊழியர்கள் ஒரே குரலின் கீழ் வாக்களிக்க உள்ளோம்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வணிகர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து குறிப்பிடவில்லை. ஜிஎஸ்டி அறிக்கை தவிர  வணிகர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் உள்ளது.
வணிகர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. எனவே, ரூ. 50 ஆயிரத்தில் இருந்து  ரூ.5 லட்சமாக வணிகர்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம் என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:
வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். பணம் கொண்டு செல்லும்போது எந்த மாதிரியான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையம் வணிகர்களை அழைத்து கருத்துகளை கேட்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில்  வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம். வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என அரசியல் கட்சிகள் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தேர்தல் அறிக்கையிலோ வெளியிட வேண்டும். அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரும் அரசு, வணிகர்களுக்கு ஒரு நியமன எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்றார் விக்கிரமராஜா.
கூட்டத்தை, புதுவை வணிகர்கள் கூட்டமைப்புத் தலைவரும், அகில இந்திய வணிகர்கள் சம்மேளன துணைத் தலைவருமான சிவசங்கர் தொடக்கிவைத்தார்.
அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத் தலைவர் மகேந்திரஷா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 27 மாநிலங்களைச் சேர்ந்த வணிகர் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், தற்போதைய வணிக சூழல், சந்தையில் ஆக்கிரமித்துள்ள சீனப் பொருள்கள் மற்றும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமைய உள்ள புதிய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய தேசிய வணிகக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு  வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com