பணப் பட்டுவாடாவைத் தடுக்க இரு சக்கர வாகனப் படை: தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக இரு சக்கர வாகனப் படை அமைக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி மாவட்ட துணை தேர்தல் அதிகாரி எஸ். சக்திவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
புதுச்சேரி மக்களவைத் தொகுதி, தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள்கள் வழங்குவதைத் தடுக்க மாவட்ட தேர்தல் துறை முழு முயற்சி எடுத்து வருகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் 33 பறக்கும் படைகள், 13 போலீஸ் படைகள், துணை ராணுவத்தினருடன் இணைந்து ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.
இருசக்கர வாகனப் படை...: தற்போது, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரி தலைமையில் போலீஸார் உள்பட தலா 10 பேரைக் கொண்ட இரு சக்கர வாகனப் படையை  அமைத்துள்ளோம். இவர்கள் தொகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுப்பர்.
 79 பேர் ஊருக்குள் நுழைய தடை...: தேர்தலில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 79 பேர் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 499 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெடி உற்பத்தி நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
222 பதற்றமான வாக்குச்சாவடிகள்...: புதுச்சேரி, காரைக்காலில் பதற்றமானதாக 222 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் உதவியுடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
தேர்தல் விதிமீறலுக்காக 4 வழக்குகள்...: இலவச தொலைபேசி எண் 1950-இல் இதுவரை 2,919 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 2,909 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதேபோல, சி-விஜில் செயலியில் வந்த 47 புகார்களில் 46 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 
தேர்தல் விதிமீறலுக்காக மாஹேவில் இரு கட்சிகள் மீதும், ஒரு பெட்ரோல் நிலையம் மீதும், புதுச்சேரியில் ஒரு பேச்சாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 9.71 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்...: புதுச்சேரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்டதாக ரூ. 3,31,37,105 ரொக்கமும், ரூ. 6,40,06,092 மதிப்பிலான பொருள்களும் என மொத்தம் ரூ. 9.71 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, தமிழகத்துக்கு கடத்த முயன்ற ரூ. 3,96,136 
மதிப்பிலான 2,182.25 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இதுவரை பிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் பிடிக்கப்படும் பணமும், பரிசுப் பொருள்களும் தீவிர விசாரணைக்குப் பிறகு, உண்மை ஆவணங்களை ஒப்படைத்தாலும் தேர்தலுக்குப் பிறகே விடுவிக்கப்படும்.
95 சதவீதம் பேருக்கு வாக்காளர் சீட்டு விநியோகம்...: புதுச்சேரி மாவட்டத்தில் 95 சதவீதம் பேருக்கு வாக்காளர் சீட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் வாக்காளர் சீட்டு விநியோகிக்கப்படும் என்றார் சக்திவேல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com