ஓட்டுநர் கொலை வழக்கில் 5 பேர் கைது
By DIN | Published On : 26th April 2019 07:27 AM | Last Updated : 26th April 2019 07:27 AM | அ+அ அ- |

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் 5 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருக்கனூரை அடுத்த சோரப்பட்டு மயானத்தில் திருபுவனை சன்னியாசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அர்ஜுனன் (28), கடந்த 23- ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து திருக்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், சோரப்பட்டு காலனியைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் தமிழ்வாணன் (31) உள்ளிட்ட 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
இதில், ரெளடி தமிழ்வாணனுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ரெளடியான சாத்ராக்குக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததும், சாத்ராக் தனது நண்பரான ஓட்டுநர் அர்ஜுனன் மூலம் தமிழ்வாணனைக் கொலை செய்ய உளவு பார்த்ததும், இதையறிந்த தமிழ்வாணன், சேஷாங்கனூரைச் சேர்ந்த அர்ஜுனனின் நண்பர்கள் பாபு, கலித்தீரம்பட்டு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் மூலம் சேஷாங்கனூர் ஏரிக்கரை பகுதிக்கு அர்ஜுனனை வரவழைத்து, தமிழ்வாணன், சோரப்பட்டு காலனியைச் சேர்ந்த சுந்தரராஜ் மகன் சுந்தரவேல் (23), மோகன் மகன் அருளரசன் (18), புதுச்சேரி கே.டி. தோட்டம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ஐயப்பன் (37) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து அவரைக் கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, தமிழ்வாணன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.