ஆரம்ப சுகாதார நிலையத்தை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு
By DIN | Published On : 27th April 2019 08:43 AM | Last Updated : 27th April 2019 08:43 AM | அ+அ அ- |

நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேதப்படுத்தியதாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பனையடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் இன்பரசன். இவரது 2 வயது குழந்தை மித்ரன், கடந்த 22- ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டது. அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சாவுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததும், உடனடியாக ஆம்புலன்ஸ் வராததும்தான் காரணம் எனக் கூறி, குழந்தையின் உறவினர்கள் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேதப்படுத்தியதுடன், மடுகரை சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரகுநாத் சார்பில் மருத்துவமனையைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸார், அடையாளம் தெரியாத 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.