கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள்: ஆளுநர் கிரண் பேடி ஆய்வு

புதுச்சேரியில் நடைபெற்று வரும் கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.


புதுச்சேரியில் நடைபெற்று வரும் கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
மத்திய அரசின் சுதேசி பாரத் தர்ஷன் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் ரூ. 70 கோடியில் காலாப்பட்டு, திப்புராயப்பேட்டை, அரிக்கன்மேடு, சின்ன வீராம்பட்டினம், சுண்ணாம் பாறு, மணப்பட்டு, நரம்பை ஆகிய 7 கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 
இதனிடையே, தனது 
226-ஆவது கள ஆய்வுப் பணிக்காக இந்தத் திட்டங்களை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை பார்வையிட்டார்.  
திப்புராயப்பேட்டை, அரிக்கன்மேடு ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
 அப்போது,  திட்டம் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட வேண்டும்.  சூரிய ஒளி மின்சார விளக்குகள் அமைக்க வேண்டும்.  
மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். கழிவுநீரைச் சுத்திகரிக்க வேண்டும். 
சுற்றுலாப் பயணிகளுக்கு வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பு வசதிகள் ஆகியவை செயல்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு கிரண் பேடி உத்தரவிட்டார்.  தொடர்ந்து அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 
 இந்த ஆய்வின் போது ஆளுநரின் கூடுதல் செயலர் சுந்தரேசன்,  அதிகாரிகள் பாஸ்கர், வல்லவன், ராமன், ஆறுமுகம், பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியதாவது:
நெகிழிப் பொருள்கள் உலகத்துக்கே சவாலான ஒன்றாக மாறியுள்ளது.  காலதாமதமின்றி அவற்றை புதுவையில் தடை செய்தது சிறந்த செயல். புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதைப் பற்றி முழுமையாக அறியாமல் கருத்துத் தெரிவிக்க முடியாது.
சிறு வயதிலேயே மேம்படுத்தும் திறன், சிறந்த பண்புகளை வளர்க்கும் நலன்கள் கல்வி முறையில் இருக்க வேண்டும். இது மிகவும் அவசியமானது என்றார் கிரண் பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com