புதுவை அமைச்சரவையில் மோதல்: காங்கிரஸ் மேலிடம் சமரச முயற்சி

புதுவை மாநில அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கையடுத்து, முதல்வர் வே.நாராயணசாமியையும்,

புதுவை மாநில அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கையடுத்து, முதல்வர் வே.நாராயணசாமியையும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயத்தையும் கட்சி மேலிடம் தில்லிக்கு அழைத்து சமரச முயற்சிகளை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக ஏற்கெனவே மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் ரூ. 8,425 கோடிக்கான திட்ட வரையறை செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அல்லது சில நாள்களில் சட்டப்பேரவை கூடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் இடையே திடீரென மோதல் போக்கு ஏற்பட்டது.
அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பு வகிக்கும் பொதுப் பணித் துறைக்கு ரூ. 100 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அதிருப்தியடைந்த அவர் மேலும் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, சமாதான முயற்சிகளைத் தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி திடீரென திங்கள்கிழமை தில்லி சென்றார்.
 பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறவும், திட்டமில்லாச் செலவினத்துக்குத் தர வேண்டிய கூடுதல் நிதியை வழங்கவும் வேண்டும் என வலியுறுத்தவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை அவர் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அமைச்சரவைக்குள் ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் உள்ளிட்ட சிலரை சந்தித்துப் பேசவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
முதல்வரைத் தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயமும் செவ்வாய்க்கிழமை தில்லி செல்ல இருப்பதாக காங்கிரஸ்  வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி மேலிடம் இருவரையும் நேரில் அழைத்து சமாதான முயற்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, தில்லியில் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் வருகிற 10- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்குள் புதுவை பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com