சுதந்திர தினம்: புதுவை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி மற்றும்  

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி மற்றும் 
அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆளுநர் கிரண் பேடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நாடு இதுவரை ஒருங்கிணைந்த வளர்ச்சியுடன், தன்னிறைவாகவும் வலுவாக வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்காக உழைத்த தலைவர்களுக்கும், அயராது பாடுபட்ட மக்களுக்கும் நன்றி.
அதேபோல, இந்தியாவுடன் இணைந்த நாளை வெள்ளிக்கிழமை (ஆக.16) கொண்டாடும் புதுவை மக்களுக்கும் எனது வாழ்த்துகள். 
வளமான, பசுமையான, சுத்தமான, நீர்வளமிக்க புதுவையை உருவாக்க அனைவரும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
புதுவை முதல்வர் வே.நாராயணசாமி: எண்ணற்ற தலைவர்களின் உயிர்த்தியாகங்கள், செல்வந்தர்களாய் வாழ்ந்து நாட்டுக்காக செல்வங்களை எல்லாம் இழந்து சிறையில் வாடியவர்கள் என்று நாம் நம் சுதந்திரத்துக்காக இழந்த தலைவர்கள் ஏராளம். இத்தகையோரின் தியாகத்தினால்தான் நம் தேசியக்கொடி இன்றளவும் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது.
எனவே, நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளுக்கு நாம் சிறிதளவும் இடம் கொடுக்காது அவர்களை இனம் கண்டு விரட்டியடிக்க வேண்டும். இதுவே, நாம் இந்த சுதந்திர தினத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் 
புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயம்:  தங்கள் உயிர்களை தியாகம் செய்து அன்னியர்களுடன் போராடி சுதந்திரம் பெற்றுத்தந்த தியாகத் தலைவர்களின் லட்சியக் கனவுகளை நனவாக்க, வரும் காலத்தில் காங்கிரஸ் பேரியக்கம் ஆட்சி அமைந்து, இந்திய தேசம் ஏற்றம் பெற சுதந்திர தின நாளில் சூளுரைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ: நாட்டின் 73-ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் இந்த நாளானது 2-ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று முழுக்க, முழுக்க ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண்களின் பாதுகாப்புக்காகவும் வழிவகை செய்யும் பொன்னாளாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கோகுலகிருஷ்ணன் எம்.பி.: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் நம் நாட்டின் பொதுமக்கள் அனைவருக்கும் வாழ்க்கையின் முழுத் தேவைகளும் தங்கு தடையின்றி கிடைக்கும் நாள்தான் உண்மையான விடுதலை நாளாகும்.  அரசுகளும், அரசியலும் அதை நோக்கியே இயங்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ.: மதம், ஜாதியின் பெயரால் மக்களை பிரித்து, அதில் அரசியல் ஆதாயம் தேடும் அற்ப அரசியல்வாதிகளின் தீய கருத்துக்கு இடம் அளிக்காமல், நாம் அனைவரும் இந்தியர் என்றும், நாட்டில் எந்த பிரிவினைவாத சக்திகளுக்கும் இடமளிக்காமலும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற நாம் அனைவரும் ஒற்றுமையுடன் சபதம் ஏற்போம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, அமைச்சர்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், ஆர்.கமலக்கண்ணன், புதுவை அரசுக் கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன் உள்ளிட்டோரும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com