போராட்டத்தை தொடர்வது குறித்து இன்று முடிவு

கிரண் பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன் நடைபெற்று வரும் போராட்டத்தை தொடர்வது குறித்து வெள்ளிக்கிழமை (பிப்.15) இறுதி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார்.

கிரண் பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன் நடைபெற்று வரும் போராட்டத்தை தொடர்வது குறித்து வெள்ளிக்கிழமை (பிப்.15) இறுதி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெளியேற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன் முதல்வர் வே. நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பிப். 13-ஆம் தேதி பிற்பகல் முதல் இரவு பகலாக தொடர்ந்து 2-ஆவது நாளாக தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முதல்வர் வே. நாராயணசாமி, காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக, இடதுசாரிகள், விசிக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதியளிக்க மறுக்கும் ஆளுநருக்கு எதிராக இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் ஆளுநர் வெளியூர் சென்றுவிட்டதால், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் இறுதி முடிவு எடுக்கப்படும்.
அமைதி வழியில் தான் போராட்டத்தை நடத்துகிறோம். 
ஆளுநரின் நடவடிக்கை மாநில வளர்ச்சிக்கு எதிராக இருந்ததால் இதுபற்றி குடியரசுத் தலைவர்,  பிரதமர்,  உள்துறை அமைச்சர்,  நிதி அமைச்சர் என பல தரப்பிலும் புகார் கொடுத்துப் பார்த்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  
தலைக்கவசம் விவகாரத்துக்காக மட்டும் நடக்கும் போராட்டம் என்று கருதக்கூடாது. தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற கருத்துக்கு நான் (முதல்வர்)  எதிரானவன் அல்ல. ஆனாலும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு என்று சில வழிகள் உள்ளன. 
தலைக்கவசம் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை மதிக்கிறோம்.  இதில் மாற்று கருத்து இல்லை.சில நேரங்களில் இது போன்றவற்றை அமல்படுத்துவது சற்று கடினமானது.  பல மாநிலங்களில் இதைக் கடைபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, விழிப்புணர்வுகளை உருவாக்கிதான் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். ஆளுநரிடம் 39 திட்டங்கள் தொடர்பாக கோப்புகள் அனுப்பினோம்.  மிகவும் அவசியமாக நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் அதில் உள்ளன.  
39 கோரிக்கைகளையும் ஆளுநர்  நிறைவேற்ற வேண்டும்.  அதுவரை போராட்டம் தொடரும். நாங்கள் மக்களவைத் தேர்தலுக்காக போராட்டம் நடத்துவதாக சிலர் விமர்சிக்கிறார்கள்.  இது  தவறு என்றார் 
நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com