திருவள்ளுவர் அரசுப் பள்ளி பொலிவுறு பள்ளியாக மாற்றப்படும்

புதுச்சேரி திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியை, முதல் பொலிவுறு  பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியை, முதல் பொலிவுறு  பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி ஜிப்மர் கலையரங்கத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பவள விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது: 
அரசுப் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் தான் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளை ஊக்கப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.  நானும், அமைச்சர் கமலக்கண்ணனும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கருத்துகளை கேட்டோம்.  அதன் பிறகு 2 சதவீதம் தேர்ச்சி அதிகரித்தது.  கல்விக்காக நிதிநிலை அறிக்கையில் அதிகம் செலவு செய்து வருகிறோம்.  முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக பத்து ஆண்டுகளுக்கு முன்பே புதுவை அங்கீகரிக்கபட்டுள்ளது.  அரசுப் பள்ளி மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டுமென்றால் அதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. மாணவர்கள் படித்து பெரிய நிலையில் வரும்போது ஆசிரியர்கள் பெருமைப்படுவர்.  நானும் அரசுப் பள்ளியில் படித்துதான் முன்னுக்கு வந்தேன்.  
இதுவரை 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிகமாக கிராமப் புறங்களில் இவை தொடங்கப்பட்டுள்ளன. 
திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளி தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு சாதித்துள்ளது.  
இப்பள்ளியில் பயின்ற மாணவிகள் பல துறைகளில் சாதித்துள்ளனர்.  
புதுச்சேரியை பொலிவுறு நகரமாக  மாற்ற உள்ளோம்.  திருவள்ளுவர் அரசுப் பள்ளியை புதுவை மாநிலத்தின் முதல் பொலிவுறு  பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.  இப்பள்ளி பிற அரசுப் பள்ளிகளுக்கு முன் உதாரணமாக திகழும் என்றார் நாராயணசாமி.
 விழாவில் பிப்டிக் தலைவர் இரா.சிவா எம்.எல்.ஏ பேசுகையில், இவ்விழாவைக் கண்டதும் எனக்கு குற்ற உணர்வு வந்துவிட்டது. நான் வ.உ.சி. பள்ளியில் படித்தேன்.  125 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 
அந்தப் பள்ளி கடந்த ஏழு ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது.  நிதி நெருக்கடி காரணமாக பள்ளி கல்வித் துறையால் எதுவும் செய்ய முடியவில்லை. 
அரசு இப்பள்ளிக்கு நிதி ஒதுக்கி கட்டடம் கட்ட வேண்டும். வ.உ.சி. பள்ளிக்கு முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் உதவுவோம் என்றார். 
விழாவில்,  ஆசிரிய, ஆசிரியைகள்,  மாணவ,  மாணவிகள், முன்னாள் மாணவ, மாணவிகள் 
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com