புதுவைக்கு தனித் தேர்வாணையத்தை உருவாக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் 

புதுவைக்கு தனியாக தேர்வாணையத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

புதுவைக்கு தனியாக தேர்வாணையத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
 இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.ராஜாங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 புதுவையில் அரசுக்குச் சொந்தமான 8 கலை, அறிவியல் கல்லூரிகளும், 3 பட்ட மேற்படிப்பு மையங்களும் உள்ளன. தற்போது, இந்தக் கல்லூரி நிர்வாகங்களில் 150-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால், 28 பாடப் பிரிவுகளில் பயிலும் சுமார் 14 ஆயிரம் மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
 கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் புதுவையைச் சேர்ந்த 60 உதவிப் பேராசிரியர்கள் தகுதி அடிப்படையில் மிகச் சொற்ப (ரூ. 10 ஆயிரம்) ஊதியத்துக்கு கெளரவப் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டனர். திடீரென இந்த ஒப்பந்த பேராசிரியர்களும் எந்தவித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
 பணி நீக்கம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் பணி வழங்குவதுடன், நியாயமான ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், நிலுவையில் உள்ள நான்கு மாத ஊதியத்தை உடனே வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கடந்த ஆண்டு புதுவை அரசுக் கல்லூரிகளுக்கு மத்திய தேர்வாணையம் மூலம் 102 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேராசிரியர்கள் மட்டுமே புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் புதுவை இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய 100 பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
 இதற்கு மத்திய தேர்வாணையத்தை புதுவை அரசு காரணம் காட்டியது. இது மிகப் பெரிய மோசடியாகும்.
 ஏற்கெனவே, கடந்த 1996-இல் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தமிழ் உள்ளிட்ட புதுவை பிராத்திய மொழி தெரிந்தவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்க முடியும் என்று இருப்பதை நடைமுறைப்படுத்தி இருந்தாலே பெரும்பாலான இடங்கள் புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு கிடைத்திருக்கும்.
 புதுவை மாநிலத்தில் பேராசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த முனைவர் பட்டம் பெற்ற 600-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் பணி வழங்க மறுக்கப்படுகிறது.
 எனவே, புதுவை அரசு தனித் தேர்வாணையத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவரை புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு பேராசிரியர் உள்ளிட்ட அரசுப் பணி கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 கல்லூரிகளில் எதிர்பார்ப்புடன் கல்வி கற்க வரும் புதுவையைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு தமிழ் மொழியே தெரியாத, ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே பேசக் கூடிய வட மாநில ஆசிரியர்களின் கற்பித்தல் முறையால், அவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com