தம்பதியிடம் ரூ. 13.40 லட்சம் மோசடி: கோவையைச் சேர்ந்தவர் உள்பட 7 பேர் மீது வழக்கு

கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து, புதுச்சேரி தம்பதியிடம் ரூ. 13.40 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்தவர் உள்பட 7 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து, புதுச்சேரி தம்பதியிடம் ரூ. 13.40 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்தவர் உள்பட 7 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
புதுச்சேரி புதுசாரம் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (40). இவரது மனைவி அமீனா பேகம் (38). துணிக் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள், கோவை காந்திபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய தனியார் நிதி நிறுவனத்தின் விளம்பர அறிவிப்பைக் கண்டு, கடந்த 2018 ஏப்ரல் மாதம், அமீனா பேகம் தனது கணவர் மற்றும் 2 உறவினர்களை உறுப்பினராகச் சேர்ந்து, அந்த நிறுவனத்தின் புதுச்சேரி காந்தி நகர் வங்கிக் கிளையில், ரூ. 13.40 லட்சத்தைச் செலுத்தினராம்.
இதைப் பெற்றுக் கொண்ட அந்த தனியார் நிறுவனம், குறிப்பிட்ட காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கித் தராமல் ஏமாற்றியதுடன், அவர்கள் செலுத்திய பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நேரில் சென்று பார்த்த போது, கோவையில் அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்ததாம். 
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமீனா பேகம் உள்ளிட்ட உறவினர்கள், இதுகுறித்து புதுவை சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், எஸ்.பி. செல்வம் தலைமையிலான போலீஸார் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளரான சேலம் குரும்பனூரைச் சேர்ந்த குறிஞ்சி, பொறுப்பாளர் அண்ணாதுரை மற்றும் ஊழியர்கள் சத்தியமூர்த்தி, கதிர்வேல், கோவை அருணாரெமி, ஈரோடு சரண்யா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில், அமீனா பேகத்திடம் பண மோசடியில் ஈடுபட்ட குறிஞ்சி உள்ளிட்ட 7 பேரும் வேறொரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் புதுச்சேரி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள குறிஞ்சி உள்ளிட்டோரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com