படித்த பள்ளிகளிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பக பதிவு செய்ய ஏற்பாடு
By DIN | Published On : 01st June 2019 10:00 AM | Last Updated : 01st June 2019 10:00 AM | அ+அ அ- |

புதுவை மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பக பதிவை படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலமாக பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை ஆணையரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான வல்லவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சான்றிதழ் பதிவு செய்வதில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், மாணவர்களின் நலன் கருதியும் மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலமாக கடந்த 2016 முதல் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல, இந்த ஆண்டும் இந்த ஏற்பாடு புதுவை அரசு கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் பயன்பெறலாம். இதற்காக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், அலுவலக எழுத்தர்களுக்கு பயிற்சி, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
2018-19-ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்படும் தேதி முதல் 15 தினங்கள் வரை மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கான பதிவு செய்யப்படும் பள்ளியிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதியப்படும். அந்த 15 தினங்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய தேதியே பதிவு மூப்பாகக் கொள்ளப்படும். மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்குச் செல்லும் போது தங்களது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதன் நகலை உடன் எடுத்து செல்லவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் வல்லவன்.