நிபா காய்ச்சல் அறிகுறி: காட்டுமன்னார்கோவில் தொழிலாளிக்கு ஜிப்மரில் தீவிர சிகிச்சை

நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலபூவிழந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (75). தொழிலாளியான இவர், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவூர் என்ற பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வந்தார்.
 இவர், கடந்த சில நாள்களாக மூச்சுத்திணறலுடன் கூடிய கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ராமலிங்கம் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், சொந்த ஊருக்கு வந்த அவர், காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு, ராமலிங்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட ராமலிங்கத்தை மருத்துவர்கள் தனி அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 4 கட்டப் பரிசோதனைகளுக்காக புணே மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வந்த பிறகே, ராமலிங்கத்துக்கு நிபா வைரஸ் காய்ச்சலா அல்லது வேறு ஏதேனும் காய்ச்சலா என்பது தெரியவரும். அதுவரை இதர காய்ச்சலுக்கான தொடர் சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்படும். தொடர்ந்து 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பில் ராமலிங்கம் இருப்பார் என ஜிப்மர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
 இதனிடையே, ராமலிங்கத்தின் சொந்தக் கிராமமான மேலபூவிழந்தநல்லூரில் ஆயங்குடி வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவக் குழவினர் கிராமம் முழுவதும் கிருமி நாசினி பொடி தெளித்து சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
 முன்னதாக, கடந்த 10-ஆம் தேதி நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி நடராஜனின் (53) ரத்த பரிசோதனையில், நிபா வைரஸ் காய்ச்சல் இல்லை எனத் தெரிய வந்தது.
 ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அவர் அண்மையில் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com