மீனவ சமுதாய முதியோர்கள் 1,411 பேருக்கு ஓய்வூதியம்
By DIN | Published On : 02nd March 2019 09:36 AM | Last Updated : 02nd March 2019 09:36 AM | அ+அ அ- |

புதுவையில் மீனவ சமுதாய முதியோர்கள் 1,411 பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
புதுவை அரசின் மீன்வளம் - மீனவர் நலத் துறை மூலம் மீனவர் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 1,411புதிய பயனாளிகள் கண்டறியப்பட்டு, தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான ஓய்வூதியத்தை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
50 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு மாதம் ரூ. 1,570, 60 முதல் 79 வயது வரையிலானவர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரமும், 80 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மாதம் ரூ.3,135 வழங்கப்பட்டது.
மேலும், சேமிப்புத் திட்டத்தின்கீழ் 2015-16 மற்றும் 2018-19-ஆம் ஆண்டுகளுக்கான தொகை முறையே ரூ.6 கோடியே 1 லட்சத்து 69 ஆயிரத்து 500, ரூ.4 கோடியே 68 லட்சம் ஆகியவற்றுக்கான காசோலையையும் மீன்வளத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் முதல்வர் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், முதல்வரின் நாடாளுமன்ற செயலர் க.லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தனவேலு, வையாபுரி மணிகண்டன், மீன்வளத் துறை இயக்குநர் இரா.முனுசாமி, இணை இயக்குநர்கள் தெய்வசிகாமணி, இளையபெருமாள் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.