பெண் கொலை வழக்கு: கணவர் உள்பட 9 பேர் கைது
By DIN | Published On : 04th March 2019 08:59 AM | Last Updated : 04th March 2019 08:59 AM | அ+அ அ- |

புதுவை மாநிலம், மடுகரையில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கணவர் உள்பட 9 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் சொர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (31). பேருந்து ஓட்டுநரான இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு நெல்லிக்குப்பத்தை அடுத்த வாழப்பட்டு காலனி பகுதியைச் சேர்ந்த கங்கா (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ராஜசேகர் மனைவி கங்கா, மடுகரை பேருந்து நிலையம் அருகே மளிகைக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
கடந்த 1-ஆம் தேதி காலை கங்கா தனது வீட்டு அருகே உள்ள கடையில் பால் வாங்கிவிட்டு, வீடு நோக்கி திரும்பிய போது, மர்ம நபர்கள் கங்காவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து மடுகரை போலீஸார் வழக்குப் பதிந்து, சந்தேகத்தின் பேரில் கங்காவின் கணவர் ராஜசேகரை பிடித்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், கங்கா பலருடன் கூடா நட்பு வைத்திருந்ததால் அவமானம் அடைந்த ராஜசேகர், தனது நண்பர்களான கலித்தீர்த்தாள்குப்பத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் சுகு (எ) சுகுமாறன் (34), திருபுவனை பாளையம் செல்வம் மகன் அருள் (எ) அருள்பிரகாஷ் (26), விழுப்புரம் மாவட்டம், மிட்டாமண்டகப்பட்டு பேட்டைத் தெருவைச் சேர்ந்த திருவள்ளுவர் மகன் பிரபாகரன் (எ) பிரபா (27), மதகடிப்பட்டு பாளையம் ராஜசேகர் மகன் குணசீலன் (24), திருபுவனை பாளையம் ஜெயச்சந்திரன் மகன் ஜெகன் (27), மடுகரை சந்திரசேகரன் மகன் தசரதன் (எ) தாஸ் (27), மிட்டாமண்டகப்பட்டு நடராஜன் மகன் ஐயப்பன்(27), திருபுவனை ரவிச்சந்திரன் மகன் ரஞ்சித் (26) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு, கங்காவை கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் திருபுவனை பகுதியில் சவுக்குத் தோப்பில் பதுங்கியிருந்த ராஜசேகரின் நண்பர்கள் 8 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட ராஜசேகர் உள்பட 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.