அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கு 6 மாதம் சிறை: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான டி. அருண் எச்சரிக்கை விடுத்தார்.

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான டி. அருண் எச்சரிக்கை விடுத்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
மக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றும் போது, நடுநிலையுடன் செயல்பட வேண்டும். 
எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்படுகின்றனர் என்ற சந்தேகத்துக்கு இடமளிக்கக் கூடாது. தேர்தல் பிரசாரங்களிலோ அல்லது வாக்கு சேகரிப்பிலோ ஈடுபடக் கூடாது. 
தேர்தலின் போது, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்காக செயல்படும் அரசு ஊழியர்கள் மீது மத்திய அரசுப் பணி (நடத்தை) விதிகள் 1964 இல் உள்ள விதி 5-இன் கீழ் மற்றும் அனைத்திந்திய பணியில் இருப்போருக்கான விதிகளின் கீழும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இல் உள்ள பிரிவு 129, அரசு ஊழியர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுதல் மற்றும் வாக்களிப்பின் போது தங்களது செல்வாக்கை பயன்படுத்துவதையும் தடை செய்கிறது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது பிரிவு 129 (3) இன் கீழ் 6 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது மேற்கண்ட இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
இந்த சட்டத்தின் பிரிவு 134 (அ) இன் கீழ் அரசு ஊழியர்கள், தேர்தல் முகவர்களாக, வாக்குச்சாவடி முகவர்களாக மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.  இந்தத் தடையை மீறுபவர்கள் மீது 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது மேற்கண்ட இரண்டும் சேர்த்து வழங்கப்படும். எனவே, அரசு ஊழியர்கள் மேற்கூறிய நடத்தை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com