தேர்தல்: திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆலோசனை: இந்திய கம்யூ. புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல் தொடர்பாக, புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்

மக்களவைத் தேர்தல் தொடர்பாக, புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்துவிட்டது.
 திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக கூட்டணியில், புதுவை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தல் பிரசார வியூகம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக புதுவை பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பிரதேச காங்கிரஸ் தலைவரும்,  அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்தார். முதல்வர் வே.நாராயணசாமி சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.  இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மு.கந்தசாமி, ஆர்.கமலக்கண்ணன், புதுவை மாநில திமுக அமைப்பாளர்கள் இரா.சிவா எம்.எல்.ஏ.,  எஸ்.பி.சிவக்குமார்,  மார்க்சிஸ்ட் கட்சி பிரதேசச் செயலர் ஆர்.ராஜாங்கம்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் தேவ.பொழிலன்,  மதிமுக மாநில அமைப்பாளர் காபிரியேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 
கூட்டத்துக்குப் பிறகு, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் 
ஆ.நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலுக்கான பிரசார உத்தி குறித்து ஆலோசனை நடத்தினோம்.  புதுவை காங்கிரஸ் அரசின் சாதனைகள் குறித்தும்,  மத்திய பாஜக அரசு அளித்த வேதனைகள் குறித்தும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.  மேலும், சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.  
தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டமும் நடைபெறும்.  மக்களவைத் தேர்தலில் புதுவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ராகுல் காந்தி விரைவில் அறிவிப்பார்.  தட்டாஞ்சாவடி வேட்பாளரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.  இவ்விரு தொகுதிகளிலும் அறிவிக்கப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி தொடர்ந்து ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.  அதையெல்லாம் சமாளித்து, கடந்த தேர்தலின்போது அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.  புதுவை காங்கிரஸ் ஆட்சி நிறைவுபெற இன்னும் இரு ஆண்டுகள் உள்ளன.  மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்.  ராகுல் காந்தி பிரதமராக வருவார்.  அதன் பின்னர் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றார் ஆ.நமச்சிவாயம்.
இந்தக் கூட்டத்தில்,  புதுவை பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து,  எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன்,  ஆர்.கே.ஆர்.அனந்தராமன்,  ஜெயமூர்த்தி,  விஜயவேணி,  தனவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com