தேர்தல் பணி: புதுச்சேரிக்கு துணை ராணுவம் வருகை

மக்களவைத் தேர்தல் பணிகளுக்காக சென்னை ஆவடியிலிருந்து துணை ராணுவப் படையினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்களவைத் தேர்தல் பணிகளுக்காக சென்னை ஆவடியிலிருந்து துணை ராணுவப் படையினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனுடன் சேர்த்து தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகளில் தேசிய, மாநில கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. மார்ச் 19 -ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. 
இந்த நிலையில், புதுச்சேரியில் தேர்தல் பணிகளுக்காக சென்னை ஆவடியில் இருந்து ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு காவல் சரக கண்காணிப்பாளர்களின் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். சனிக்கிழமை காலை முதல் துணை ராணுவத்தினர் அந்தந்தக் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு போலீஸாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை அவர்கள் சோதனை செய்தனர். சோனாம்பாளையம் சந்திப்பில் கிழக்கு எஸ்பி சி.மாறன் தலைமையில், துணை ராணுவப் படையினர் சோதனை மேற்கொண்டனர். இதேபோல, கோரிமேடு ஜிப்மர் எதிரே துணை ராணுவப் படையுடன் இணைந்து தன்வந்திரி நகர் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த பேருந்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர். ஜிப்மர் முன்பு நிழற்குடையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளையும் அப்புறப்படுத்தினர். அங்கிருந்த உணவகம், தேநீர் கடைகளில் இருந்த எரிவாயு உருளைகளைப் பறிமுதல் செய்தனர். அங்கு, ஆக்கிரமித்து கடைகளை போடக் கூடாது என உரிமையாளர்களுக்கும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல, இடையார்பாளையம் பகுதியில் கடலூர் சாலை உள்ளிட்ட இடங்களிலும் உள்ளூர் சட்டம் -ஒழுங்கு போலீஸாருடன் இணைந்து துணை ராணுவப் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com