மருத்துவக் கல்லூரி ஊழியருக்கு மதுப் புட்டி குத்து: இருவர் கைது
By DIN | Published On : 24th March 2019 05:04 AM | Last Updated : 24th March 2019 05:04 AM | அ+அ அ- |

புதுவை மாநிலம் திருபுவனையில் முன் விரோதம் காரணமாக மருத்துவக் கல்லூரி ஊழியரை மதுப் புட்டியால் குத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருபுவனை அருகே உள்ள திருபுவனை பாளையம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் பிரசாந்த் (24). இவர், மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
பிரசாந்துக்கும், மதகடிப்பட்டு பாளையம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த வீரப்பனுக்கும் (32) முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில், பிரசாந்த் வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள கருமகாரிய கொட்டைகை அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த வீரப்பன், அவரது நண்பர் பிரகாஷ் (26) ஆகியோர் சேர்ந்து அவரை வழிமறித்து மதுப் புட்டியால் குத்தினராம். இதில், பலத்த காயமடைந்த பிரசாந்த், சிகிச்சைக்காக அவர் வேலை பார்ந்து வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை சந்திரசேகரன் அளித்த புகாரின்பேரில், திருபுவனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வீரப்பன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.