தொழில்சங்கங்கள் மே தின விழா கொண்டாட்டம்

புதுவை மாநிலத்தில் பல்வேறு தொழில்சங்கங்கள் சார்பில் மே தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுவை மாநிலத்தில் பல்வேறு தொழில்சங்கங்கள் சார்பில் மே தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 புதுவை மாநிலத்தில் மே தினத்தையொட்டி, ஏஐடியூசி சார்பில் 100 இடங்களில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக, புதிய பேருந்து நிலையத்தில் நகர பேருந்து தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர்
 ஜெ. மரிகிறிஸ்டோபர், செயலர் என்.சுகுமாறன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியூசி மாநிலச் செயல் தலைவர் வி.எஸ். அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச் செயலர் கே. சேதுசெல்வம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
 இதுதவிர ஆட்டோ, லோடுகேரியர், மீன் வியாபாரிகள், கைத்தறி நெசவாளர்கள், சுற்றுலா வாகனம், கட்டடத் தொழிலாளர்கள், பாசிக், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பாண்டெக்ஸ், நவீன அரிசி ஆலை, அரசு அச்சகம் உள்ளிட்ட பல்வேறு ஏஐடியூசி தொழில்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி அஜீஸ் நகரில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மே தின விழாவில் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் மே தின கொடியேற்றினார். சிஐடியூ அலுவலகத்தில் பிரதேச செயலர் ராஜாங்கம் கொடியேற்றினார்.
 இந்தியன் காபி ஹவுஸ் கூட்டுறவு சங்கத்தில் சிஐடியூ தலைவர் கே. முருகன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பாண்டெக்ஸ் சங்கத்தில் நடைபெற்ற மே தின விழாவில் பொதுச் செயலர் சீனுவாசன் சிறப்புரையாற்றினார். லாஸ்பேட்டை அலுவலகத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் கொடியேற்றினார். தொடர்ந்து, மாலையில் பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஜீவா சிலை அருகே நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் சிஐடியூ நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 தொமுச சார்பில் புதுவையில் 10 இடங்களில் மே தின கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 தனியார் ஓட்டுநர், நடத்துநர் நலச் சங்கம் சார்பில் பெரியார் பணிமனை, அரியாங்குப்பம், பிஆர்டிசி, புதிய பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தங்களிலும் மே தின விழா கொண்டாடப்பட்டது. அங்கு அன்னதானமும் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு தொமுச மாநிலத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ அனிபால் கென்னடி, மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் தைரியநாதன் உள்ளிட்ட அனைத்து தொமுச சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் காமராஜர் சதுக்கத்திலிருந்து அண்ணா சிலை வரை மே தின பேரணி நடைபெற்றது. தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் கடலூர் ஒருங்கிணைப்பாளர் மணியரசு, மகேந்திரன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர். பேரணி நிறைவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 இதேபோல, ஐஎன்டியூசி சார்பிலும், புதுச்சேரி வேளாண் துறை பொறியியல் பணிமனை பிரிவு சங்கம் சார்பிலும் மே தின விழா கொண்டாடப்பட்டது.
 புதுச்சேரி உப்பளம், தாம்பரம் நகர் அண்ணா தொழில்சங்க ஆட்டோ சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணிகளை வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு - புத்தகங்களும் வழங்கப்பட்டன.
 இதேபோல, நெல்லித்தோப்பு லெனின் வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. முன்னாள் எம்.பி. ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 புதுச்சேரி மக்கள் நீதிமய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மே தின விழாவில் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் பங்கேற்று, கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கி, அலுவலகம் முன் மரக்கன்று நட்டார். இதில் இணை பொதுச் செயலர் ப.முருகேசன், பொருளாளர் தாமோ. தமிழரசன், செயலர்கள் நிர்மலா சுந்தரமூர்த்தி, ஏ.கே. நேரு, இராம. அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் சுப்பையா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சேஷாச்சலம் தலைமையில் கொடியேற்றி மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
 ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்தினர் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு நுழைவுவாயில் முன் மே தினத்தை கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு பொதுச் செயலர் ஆரோக்கியம் கலைமதி தலைமை வகித்தார். தலைவர் செந்தாமரைக் கண்ணன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதில் இணைச் செயலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல, பல்வேறு சங்கங்கள் சார்பில் ஆங்காங்கே மே தின கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com