நீட்' தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை: பெற்றோர்கள் குற்றச்சாட்டு

 புதுச்சேரியில் "நீட்' தேர்வு எழுத அமைக்கப்பட்ட 10 மையங்களிலும் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.


 புதுச்சேரியில் "நீட்' தேர்வு எழுத அமைக்கப்பட்ட 10 மையங்களிலும் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான "நீட்'  தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
புதுச்சேரி பிச்சவீரன்பேட் கிரிஸ்ட் பொறியியல் கல்லூரி, வில்லியனூர் ஆச்சாரியாபுரம் ஆச்சார்யா பொறியியல் கல்லூரி,  பிள்ளைச்சாவடி புதுச்சேரி பொறியியல் கல்லூரி, ஆச்சார்யாபுரம் ஆச்சார்யா சிக்ஷா மந்திர், மூலகுளம் ஸ்ரான்ஸ்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி, ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா,  காலாப்பட்டு ஸ்டெடி பள்ளி, முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷனல் பள்ளி, தேங்காய்த்திட்டு ஆச்சார்யா பால சிக்ஷா மந்திர் ஆகிய 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி 5 மணி வரை தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுதுவோர் விவரம் தரமறுப்பு:  "நீட்' தேர்வு மாநில அரசின் கல்வித் துறையின் கீழ் நடத்தப்படவில்லை என்பதால்,  புதுச்சேரியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளித் தரப்பை தேசிய தேர்வு முகமையான என்.டிஏ. நியமித்திருந்தது. கடந்த முறை கேந்திரியா வித்யாலயா தரப்பினர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது தனியார் பள்ளி தரப்பு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனியார் பள்ளித் தரப்பு "நீட்' தேர்வு மையங்களின் விவரம், எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர் உள்ளிட்ட எந்தத் தகவலையும் தர மறுத்துவிட்டது. 
விவரங்களைத் தரக் கூடாது என்று என்.டி.ஏ. (தேசிய தேர்வு முகமை) தெரிவித்ததாகவும், தேவையெனில் தேசிய தேர்வு முகமையிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறையின் மூலம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த தகவல்படி,  புதுச்சேரியில் உள்ள 10 மையங்களில் 6,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதாகத் தெரிகிறது.
தேர்வுக்காக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன், காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்து விட்டனர்.
தேர்வுக்கான அனுமதிச் சீட்டை சரிபார்த்த பின்னர், நண்பகல் 12 மணியில் இருந்து 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த முறை போலவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் வியர்வையைத் துடைத்துக் கொள்ள கைக்குட்டை எடுத்துச் செல்லவும் அனுமதி மறுத்துவிட்டதாகவும், காத்திருக்கும் நபர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
எனினும், "நீட்' தேர்வை பிற்பகலில் நடத்துவதை வரவேற்பதாகவும், இதனால் மையங்களுக்கு வர போதிய கால அவகாசம் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com