ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியர் வீட்டில் நகை திருட்டு
By DIN | Published On : 18th May 2019 07:55 AM | Last Updated : 18th May 2019 07:55 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியர் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் விபி சிங் நகர் பாரதிதாசன் வீதியில் வசிப்பவர் கருணாநிதி (64). ஜிப்மரில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் தனித் தனியே வசித்து வரும் நிலையில், கருணாநிதி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது மனைவி திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் செல்ல வீட்டில் உள்ள பீரோவைத் திறந்து பார்த்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 8 பவுன் தங்க நகைகளை காணவில்லையாம்.
இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த சமையலறையை நவீனப்படுத்துவதற்காக தச்சுத் தொழிலாளிகள் பணியாற்றியதும், அவர்கள்தான் நகைகளை எடுத்திருக்க வேண்டும் எனக் கருதி, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்த விஜய், நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த குமரன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, போலீஸர் அவர்களைத் தேடி வருகின்றனர்.