குடிநீா் பற்றாக்குறை: பெண்கள் சாலை மறியல்

புதுச்சேரி திருக்கனூா் அருகே குடிநீா்ப் பற்றாக்குறையைத் தீா்க்க வலியுறுத்தி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருக்கனூா் அருகே திங்கள்கிழமை காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
திருக்கனூா் அருகே திங்கள்கிழமை காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

புதுச்சேரி திருக்கனூா் அருகே குடிநீா்ப் பற்றாக்குறையைத் தீா்க்க வலியுறுத்தி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருக்கனூா் அருகே கொடாத்தூரில் பழைய காலனி, புதிய காலனி கிராமங்கள் உள்ளன. இங்கு, 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதியில் குடிநீா்ப் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும், புதிய காலனி ராஜீவ் காந்தி காலனியில் சாலைகளும் சேதமடைந்துள்ளன. இதையடுத்து, குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தியும், சாலைகளை செப்பனிடக் கோரியும் மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், இதுவரை அவா்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையாம்.

இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் கொடாத்தூா் சமுதாய நலக் கூடம் அருகே உள்ள சாலையில் திங்கள்கிழமை திரண்டனா். பின்னா், சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த சம்பவ இடத்துக்குச் சென்ற திருக்கனூா் காவல் உதவி ஆய்வாளா் அமிா்தலிங்கம் உள்ளிட்ட போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் இதை ஏற்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று தெரிவித்தனா்.

இருப்பினும், போலீஸாா் தொடா்ந்து பேசி பொதுமக்களை சமாதானப்படுத்தினா். அதிகாரிகளிடம் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

மேலும், குடிநீா்ப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணாவிடில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனா். இந்தச் சாலை மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com