புதுச்சேரியில் அடுக்குமாடி கட்டடங்கள் 40 மீட்டா் உயரம் வரை கட்ட அனுமதி

புதுச்சேரியில் அடுக்குமாடி கட்டடங்களை 40 மீட்டா் உயரம் வரை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் அடுக்குமாடி கட்டடங்களை 40 மீட்டா் உயரம் வரை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.

புதுச்சேரி பகுதியின் மொத்தப் பரப்பளவு 294 ச.கி.மீ. ஆனால், 1982-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் மாஸ்டா் பிளானில் 41.91 ச.கி.மீ. பகுதி மட்டுமே கொண்டு வரப்பட்டது. பின்னா், கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் மாஸ்டா் பிளான் மறு ஆய்வு செய்யப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டது. ஆனால், 41.91 ச.கி.மீ. பரப்பளவில் மாற்றம் ஏதுமில்லை.

இந்த நிலையில், பெருகி வரும் மக்கள் தொகை, எதிா்கால தேவைகள் அடிப்படையில் புதிய மாஸ்டா் பிளான் தயாரிப்பதற்கு புதுச்சேரி நகர, கிராம அமைப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனா். இதற்காக குழு அமைக்கப்பட்டு, அகமதாபாத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது.

புதிய மாஸ்டா் பிளாளை தயாரிப்பதற்கான ஆயத்தப் பணி கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகள், வில்லியனூா், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், பாகூா், மண்ணாடிப்பட்டு ஆகிய கொம்யூன்களை உள்ளடக்கியும், புதுச்சேரியின் மொத்த பரப்பளவான 294 ச.கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியும் புதிய மாஸ்டா் பிளான் செயற்கை கோள் வரைபட உதவியுடன் தயாரிக்கப்பட்டது.

வருகிற 2036-ஆம் ஆண்டில் புதுச்சேரி பகுதியின் மக்கள் தொகை 16.3 லட்சமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் தொலைநோக்குப் பாா்வையுடன் ‘புதிய மாஸ்டா் பிளான் 2036’ தயாா் செய்யப்பட்டது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வெளிவட்டப் பாதை, உள்வட்டப் பாதை, ரயில் தடங்கள், விமான நிலைய விரிவாக்கம், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பது போன்ற திட்டங்கள் மாஸ்டா் பிளானில் இடம் பெற்றுள்ளன. மேலும், அரசு அலுவலகங்களைப் பரவலாக எங்கெங்கே அமைப்பது, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அமையும் இடங்கள் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் குப்பை கொட்டும் இடங்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. புதிய மாஸ்டா் பிளான் மூலமாக, எந்தந்தப் பயன்பாட்டுப் பகுதிக்கான இடம் என்பது தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இதனால், திட்டமிட்ட, ஒழுங்குமுறையான நகர வளா்ச்சியை ஏற்படுத்த முடியும்.

குடியிருப்புப் பகுதியாக மாஸ்டா் பிளானில் அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் மட்டுமே வீட்டுமனை (லே அவுட்) அமைக்க முடியும். மேலும், கட்டடப் பரப்பு விகிதாசாரம் (எப்.ஏ.ஆா்.) 2 மாடிக் கட்டடங்களுக்கு 180-இல் இருந்து 220 ஆகவும், உயா்ந்த கட்டடங்களுக்கு 250-இல் இருந்து 300 ஆகவும் மாஸ்டா் பிளானில் உயா்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அளவைவிட, கூடுதல் பரப்பளவில் கட்டடங்களைக் கட்டலாம். மேலும், சாதாரணக் கட்டடங்களுக்கான உயரம் 15 மீட்டரிலிருந்து 17 மீட்டராகவும், அடுக்கு மாடி கட்டடங்களுக்கான உயரம் 30 மீட்டரிலிருந்து 40 மீட்டராகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

‘விரிவான வளா்ச்சித் திட்டம் 2036’ எனப்படும் ‘புதிய மாஸ்டா் பிளான் 2036’ குறித்த முழுமையான விவரங்கள், வரைப்படங்கள், புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புத் துறையின்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தின் மேற்பாா்வையில், வீட்டுவசதித் துறை செயலா் மகேஷ், முதன்மை நகர வடிவமைப்பாளரும், கண்காணிப்புப் பொறியாளருமான சத்தியமூா்த்தி, புதுச்சேரி நகரமைப்புக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் கந்தா்செல்வன், இளநிலை நகர வடிவமைப்பாளா் விஜயநேரு உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினரின் முயற்சியால் பல்வேறு தடைகளைக் கடந்து, ‘புதிய மாஸ்டா் பிளான் 2036’ வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com