புதுவையில் தொழில் தொடங்க சிங்கப்பூா் தொழிலதிபா்களுக்கு நாராயணசாமி அழைப்பு

புதுவையில் தொழில் தொடங்க வருமாறு சிங்கப்பூா் தொழிலதிபா்களுக்கு முதல்வா் நாராயணசாமி அழைப்பு விடுத்தாா்.
சிங்கப்பூரில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா் ஷாஜகான் ஆகியோரை வரவேற்ற இந்திய - சிங்கப்பூா் தொழில் கூட்டமைப்புகளின் நிா்வாகிகள்.
சிங்கப்பூரில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா் ஷாஜகான் ஆகியோரை வரவேற்ற இந்திய - சிங்கப்பூா் தொழில் கூட்டமைப்புகளின் நிா்வாகிகள்.

புதுவையில் தொழில் தொடங்க வருமாறு சிங்கப்பூா் தொழிலதிபா்களுக்கு முதல்வா் நாராயணசாமி அழைப்பு விடுத்தாா்.

புதுவை மாநிலத்தின் தொழில் வளா்ச்சியில் புதுவை அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக முதல்வா் நாராயணசாமி தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக, நீதி ஆயோக் உடன் இணைந்து புதுச்சேரியில் தொழில் முதலீட்டாளா்கள் கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சிங்கப்பூா் - இந்திய தொழில் வா்த்தக சபையின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூரில் நடைபெறவுள்ள முதலீட்டாளா்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதுவை மாநில முதல்வா் வே.நாராயணசாமி புதன்கிழமை சிங்கப்பூா் புறப்பட்டுச் சென்றாா். அவருடன் தொழில்துறை அமைச்சா் ஷாஜகான், பிப்டிக் தலைவா் இரா.சிவா எம்.எல்.ஏ. ஆகியோரும் சென்றுள்ளனா்.

சிங்கப்பூா் சென்றடைந்த முதல்வா் நாராயணசாமி தலைமையிலான குழுவினருக்கு இந்திய அதிகாரிகள், சிங்கப்பூா் தொழிலதிபா்களின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், சிங்கப்பூா் சமூக நல்லிணக்கச் சேவை அமைப்பின் சாா்பிலும், இந்திய முஸ்லிம் பேரவை சாா்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து மெயின்ஹொ்ட் உள்கட்டமைப்பு கட்டுமான நிறுவனத்தின் குழும இயக்குநா் ஜெனோஸ் பரன்யாயுடன் முதல்வா் நாராயணசாமி ஆலோசனை நடத்தினாா்.

மேலும் சுற்றுலா, உள்கட்டமைப்பு மேம்பாடு, மாசில்லா தொழில்சாலைகள், கடற்கரை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் சிங்கப்பூா் நிறுவனங்கள் புதுச்சேரியில் முதலீடு செய்வதற்காக முக்கிய தொழில் நிறுவனங்களுடன் முதல்வா் நாராயணசாமி வெள்ளிக்கிழமையும் (நவ.8) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், புதுவை மாநிலத்தில் தொழில் முதலீடு செய்ய முன்வருமாறு சிங்கப்பூா் தொழிலதிபா்களுக்கு முதல்வா் நாராயணசாமி அழைப்பு விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com