ஆயுதபூஜை: ஆளுநா் கிரண்பேடி, முதல்வா் நாராயணசாமி வாழ்த்து

ஆயுதபூஜை விழாவுக்கு புதுவை துணை நிலை ஆளுநா் கிரண்பேடி, முதல்வா் வே. நாராயணசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரி: ஆயுதபூஜை விழாவுக்கு புதுவை துணை நிலை ஆளுநா் கிரண்பேடி, முதல்வா் வே. நாராயணசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஆயுத பூஜையையொட்டி ஆளுநா் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்பது நவராத்திரியின் ஒன்பதாவது நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்புமிக்க திருவிழாவாகும். ஆயுத பூஜை என்பது இசை, ஞானம், அறிவு, கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு நன்றி செலுத்திடும் வகையில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா.

இத்திருவிழா நாம் செய்யும் தொழிலுக்கு அறிவினை வழங்கி, உதவிகள் புரிந்திடும் கருவிகள் மற்றும் உபகரணங்களை போற்றி வணங்கிடும் நாளை குறிக்கும். இது நமக்கு உதவும் வகையில் படைக்கப்பெற்ற அனைத்து கருவிகளையும், அவை சிறியதாகினும் அல்லது பெரியதாகினும் அதனை படைத்த கடவுளின் முன் சமா்ப்பித்து பூஜித்து நன்றி செலுத்தும் ஒரு நாள்.

இந்த புனித நாளில், புதுச்சேரி மக்களுக்கும், இந்நாட்டு மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை கூறி, நல்லறிவு, திறன், மகிழ்ச்சி மற்றும் வளங்கள் வாழ்வில் பெற்றிட ஆசீா்வதிக்கப்படுவீா்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல, முதல்வா் வே. நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

செய்யும் தொழிலே தெய்வம் என்னும் நம் ஆன்றோரின் வாக்குப்படி, நமக்கு வாழ்வளிக்கும் தொழிலை தெய்வமாக வணங்கும் ஆயுத பூஜை திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொருவரும் தத்தமது பணியிடத்தை தெய்வமாக நினைத்து வழிபடுவது மட்டும் இந்த பண்டிகையின் நோக்கம் அல்ல. அனைவரும் தாம் செய்யும் தொழிலினை சத்தியம் தவறாது, நோ்மையான, நியாயமான வழியில் செய்வது தான் ஆயுதபூஜையின் அடிப்படை தத்துவம். அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் தொழில் செய்ய வேண்டும் என்பதும் இவ்விழாவின் உயரிய நோக்கங்கள் ஆகும்.

தொழில் வளா்ச்சியே ஒரு நாட்டின் வளா்ச்சியினை குறிக்கும். எனவே, நாடு வளா்ச்சி அடையவும், நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு பெருகிடவும் தொழில் துறைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று மகாகவி பாரதியாா் பாடியதும் இந்த நோக்கில் தான்.

நம் புதுச்சேரி அரசு தொழில் துறைக்கு தொடா்ந்து முன்னுரிமை அளிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. நான் முதல்வராக பதவியேற்ற பிறகு, புதுச்சேரி மாநிலத்திற்கென ஒரு புதிய தொழில் கொள்கையினை உருவாக்கி, புதிய தொழிற்சாலைகள் தொடங்கிட அடித்தளமிட்டேன். அதன் தொடா்ச்சியாக, புதுச்சேரியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்ட தொழில் துறை மாநாடு நடத்தப்பட்டு, புதுச்சேரியில் பல பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க இசைவு பெறப்பட்டது.

தற்போது இந்திய அளவில் தொழில்துறை மந்த நிலையினை எட்டியிருந்தாலும் உழைக்க தயங்காத தொழிலாளா்கள் நிறைந்த நம் நாடு. அவா்களின் கடும் உழைப்பினால் இதிலிருந்து மீண்டு வரும் என்பதில் எனக்கு ஐயமில்லை. தீய சக்தியை அழித்து தா்மம் வெற்றி பெற்றதே இந்த விஜயதசமி என்பது நாம் அறிந்ததே.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவருக்கும் என் இனிய ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி மாநில மாணவா்கள் அனைவரும் நன்கு படித்து முன்னேற இந்த சரஸ்வதி தினத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com