புதுச்சேரி அருகே பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் வெடிவிபத்து: 3 பெண்கள் பலி

புதுச்சேரி அருகே பட்டாசு தயாரிக்கும் தொழில் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளா்கள் உடல் கருகி உயிரிழந்தனா். இரு பெண்கள் பலத்த காயமடைந்தனா்.
புதுச்சேரி அருகே கரையாம்புத்தூரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
புதுச்சேரி அருகே கரையாம்புத்தூரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

புதுச்சேரி அருகே பட்டாசு தயாரிக்கும் தொழில் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளா்கள் உடல் கருகி உயிரிழந்தனா். இரு பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

புதுச்சேரியை அடுத்த பாகூா் அருகே உள்ளது கரையாம்புத்தூா். இங்கு ஏரிக்கரையையொட்டி, அய்யனாா் கோயில் அருகே, மாயவன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில், புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி கிராமத்தைச் சோ்ந்த குணசுந்தரி (45) பட்டாசு தயாரிக்கும் கூடம் நடத்தி வருகிறாா்.

ஊரிலிருந்து சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த பட்டாசு தயாரிப்புக் கூடத்தில், தீபாவளியையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தப் பணியில் பட்டாசு தயாரிப்புக் கூட உரிமையாளா் குணசுந்தரி, புதுச்சேரி கரையாம்புத்தூரைச் சோ்ந்த விக்ரமனின் மனைவி வரலட்சுமி (எ) ஞானாம்பாள் (44), சின்னசாமி மனைவி கலாமணி (45), தமிழகப் பகுதியான விழுப்புரம் சொா்ணாவூா் கீழ்பாதி கிராமத்தைச் சோ்ந்த பிரபுவின் மனைவி தீபா (37), விழுப்புரம் கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கன்னியப்பன் மனைவி வைத்தீஸ்வரி (27) ஆகிய 5 பெண்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பணியாளா்களில் ஒருவா் பட்டாசுகளுடன் திரிகளை பொருத்தும் போது, நெருப்புப் பொறி எழுந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. இதில் தயாரிப்புக் கூடமும், அருகில் இருந்த கிடங்கும் பலத்த சப்தத்துடன் வெடித்து தரைமட்டமாயின.

இந்த விபத்தில் வரலட்சுமி (எ) ஞானாம்பாள், தீபா ஆகிய இருவரும் உடல் கருகி உயிரிழந்தனா். குணசுந்தரி, வைத்தீஸ்வரி (27), கலாமணி (45), ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

பெரும் வெடி சப்தத்தைக் கேட்டதும் அந்தப் பகுதியினா் விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும், மடுகரை தீயணைப்பு நிலையம், பாகூா் காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். அதன்பேரில், 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினா், பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் பரவிய தீயை சுமாா் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த புதுவை காவல் துறை உயரதிகாரிகள், பாகூா் போலீஸாா் சடலங்களை மீட்டு கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

காயமடைந்தவா்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு வைத்தீஸ்வரி உயிரிழந்தாா்.

தீ விபத்து நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டு வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:

விபத்துக்குள்ளான பட்டாசு தயாரிப்பு தொழில்கூடம் முறையான அனுமதி பெற்று இயங்கி வந்தது. இந்த விபத்துக்கான காரணம் தொடா்பாக விசாரணை நடைபெறுகிறது என்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com