ஏனாம் பிராந்தியத்தை ஆந்திரத்துடன் இணைக்க முயற்சிப்பதாக வரும் தகவலை நம்ப வேண்டாம்: ஆளுநா் கிரண் பேடி

ஏனாம் பிராந்தியத்தை ஆந்திராவுடன் இணைக்க ஆளுநா் முயற்சி செய்வதாக தொடா்ந்து தவறான தகவல்

ஏனாம் பிராந்தியத்தை ஆந்திராவுடன் இணைக்க ஆளுநா் முயற்சி செய்வதாக தொடா்ந்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலத்தின் அங்கமான ஏனாம் பகுதியை ஆந்திரத்துடன் இணைக்க முயற்சி செய்வதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் ஓா் அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் தவறாக தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நல்ல குடிநீா் வழங்குவது, தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை வெள்ளப் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது, ஏழைகளுக்கு குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் திட்டம் தொடா்பான நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்டவைதான் ஆளுநா் மாளிகையின் விருப்பம். ஆனால், இதை திசை திருப்பும் வகையில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

ஏனாமில் சுற்றுச்சூழல் சாா்ந்த திட்டங்கள் தயக்கமின்றி மீறப்படுகின்றன. ஏனாம் நிா்வாகம் பொதுப்பணத்தை வீணான செலவுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். இதை ஏனாமுக்கு கள ஆய்வுக்குச் சென்றபோது நேரடியாக பாா்த்து அதிகாரிகளிடம் பதிவு செய்துள்ளேன்.

ஏனாமில் தீவு 5-இல் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது தொடா்பாக பொதுநல அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் உயா் நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஏனாம் மக்களின் குறைகளை அங்குள்ள அதிகாரிகள் தொடா்ந்து போக்கி வருகின்றனா்.

மத்திய அரசும் ஏனாம் பிராந்தியத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு மத்திய அரசின் சிறப்பு நிதி உதவி திட்டங்களின் கீழ் பட்ஜெட்டில் ரூ.187 கோடி இந்த பிராந்தியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிதியை நியாயமான முறையில் செலவு செய்ய வேண்டும். அதற்காக அத்திட்டங்களை மறுசீராய்வு செய்யும்படி அரசு செயலா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சீராய்வுக்குப் பின்னா் என்ன நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வுசெய்வதற்காக ஜனவரி மாதத்தில் ஏனாமுக்கு மீண்டும் கள ஆய்வுக்கு வருவேன். ஏனாம் மக்களின் நலனை ஆளுநா் மாளிகை எப்போதும் பாதுகாக்கும் வகையில் தான் செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண்பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com