புதுவை அரசு மீது ஆளுநருக்கு காழ்ப்புணர்வு: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு மீது துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காழ்ப்புணர்வுடன் செயல்படுவதாக முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு மீது துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காழ்ப்புணர்வுடன் செயல்படுவதாக முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுவை அரசின் பொதுப் பணித் துறை சார்பில், தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சாலைகள், கட்டடங்களைப் பழுதுபார்த்தல், மேம்படுத்துதல் மற்றும் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்து, மத்திய அரசின் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கக் கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய மீன்வளம், வேளாண் துறை சார்பில், இந்தத் திட்டத்தை ரூ.15.63 கோடியில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தும் பணிக்காக ரூ.6.53 கோடிக்கும், பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணிகளுக்காக ரூ.4.45 கோடிக்கும் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, பணிகளைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
இலங்கைக் கடற்படையினராலும், கடலோரக் காவல் படையினராலும் காரைக்கால் மீனவர்களும், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படும்போது, முனைந்து செயல்பட்டு அவற்றை மீட்டு வருகிறோம். புயல் கால சேமிப்புத் திட்ட நிதிக்கான காலக்கெடு முடிந்துவிட்டதாகக் கூறி, நிதியை மத்திய அரசு தர மறுத்தது. இரண்டு முறை மத்திய அமைச்சரைச் சந்தித்தும் நிதி கிடைக்காத நிலையில், விடாமல் மீண்டும் மூன்றாவது முறையாகச் சந்தித்துப் பேசியபோது, அமைச்சர் அதிகாரிகளை அழைத்து விவரங்களைக் கேட்டறிந்தார்.
அப்போது, அந்தத் திட்டத்தில் நிதி செலவு செய்யப்படாமல் இருப்பது தெரிந்து, நிதியை புதுவைக்கு வழங்கச் செய்தார். மேலும், மழை நிவாரணம், ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மீனவர்கள் ரூ.50 லட்சத்துக்கு படகு வாங்குகின்றனர். ஆனால், ரூ.50 ஆயிரத்துக்கு மட்டுமே காப்பீடு செய்கின்றனர். இதனால், ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது, மீனவர்களின் குடும்பம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறது. எனவே, குடும்பத்தைக் காப்பாற்றும் வகையில், காப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கட்ட வேண்டும். எவ்வளவோ பேர் சுனாமியின் போது, வீடு கட்டுவதற்கான ரூ.3.25 லட்சத்தை பயனாளிகளிடம் நேரடியாக அளிக்கக் கூறினர். ஆனால், நான் நேரடியாகப் பணத்தை அளித்தால் வீணாகப்போகும் என்பதை உணர்ந்து, வீடு கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதனால்தான், தற்போது சுனாமி குடியிருப்புகள் உருவாகியுள்ளன.
புதுச்சேரியில் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவந்துதான் ஆக வேண்டும். அதற்காக, ரூ.17 கோடியில் மணல் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மீனவர்களின் படகுகளும் சென்றுவர முடியும். அடுத்து, வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல மீன்களைப் பதப்படுத்தும் மையமும் அமைத்துத் தரப்படும்.
இலவச அரிசி வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. அதன்படி, ரூ.160 கோடி நிதி ஒதுக்கி, ஒப்பந்தம் விடுவதற்காக துணை நிலை ஆளுநரிடம் கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அரிசிக்குப் பதில் பணம்தான் வழங்க வேண்டும் என்று கூறி, ஆளுநர் அனுமதி தர மறுத்து வருகிறார். சந்தையில் அரிசியின் விலை தினந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்.
அதேபோல, பணம் குடும்பத்தலைவரின் வங்கிக் கணக்குக்கு போகும்போது, அதை அவர்கள் வீண் செலவு செய்வர். அதுமட்டுமன்றி, வெளிமாநிலங்களுக்கு சென்றவர்களுக்கும் அரிசிக்கான பணம் தொடர்ந்து சில மாதங்களுக்கு தேவையின்றி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். அதுவே அரிசி வழங்கினால், வெளிமாநிலங்களுக்கு சென்றிருப்பவர்கள் வந்து வாங்க மாட்டார்கள். இதனால்தான் அரிசியை மக்களிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.ஆனால், நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஆளுநர் பணம் தான் வழங்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால், இலவச அரிசி வழங்க போராட்டம் நடத்தவும், நீதிமன்றத்தை அணுகும் நிலையிலும் உள்ளோம்.
ஏனாமில் மத்திய அரசின் நிதியுதவியில் வெள்ளத் தடுப்புத் தடுப்புச் சுவர் ரூ.123 கோடியில் கட்டப்பட உள்ளது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக இந்தத் திட்டத்துக்கு ஆளுநர் அனுமதி தர மறுத்து காழ்ப்புணர்வுடன் செயல்படுகிறார் என்றார் முதல்வர் நாராயணசாமி.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம்,  மல்லாடி கிருஷ்ணா ராவ், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., பொதுப் பணித் துறைச் செயலர் ஸ்ரன், தலைமைப் பொறியாளர் மகாலிங்கம், மீன்வளத் துறை இயக்குநர் முனுசாமி உள்படப் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com