ரத்த சோகை நோய் கண்டறிதல் முகாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறை சார்பில் இலவச ரத்த சோகை நோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் புதுச்சேரியில் திங்கள்



புதுச்சேரி: புதுவை அரசின் சுகாதாரத் துறை சார்பில் இலவச ரத்த சோகை நோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் புதுச்சேரியில் திங்கள்
கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு குடும்ப நலத் துணை இயக்குநர் அல்லிராணி தலைமை வகித்தார். "போஷன் அபியான்' திட்ட நிர்வாக அதிகாரியும் ஓதியஞ்சாலை ஆரம்ப சுகாதார மருத்துவ அதிகாரியுமான வெங்கடேஸ்வரலு மற்றும் குயவர்ப்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி 
நிர்மல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுவை அரசு சுகாதாரத் துறை இயக்குநர்  மோகன்குமார் கலந்து கொண்டு, ரத்த சோகை கண்டறிதல் முகாம், ஊட்டச்சத்து கொலு, இரும்புச் சத்துகள் நிறைந்த உணவுப் பொருள்கள் கண்காட்சி ஆகியவற்றைத் தொடக்கி வைத்தார்.
முகாமில் ரத்த சோகை நோயைக் கண்டறிதல், அதற்குரிய சிகிச்சை அளித்தல், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவி ஆய்வாளர்கள் வாயிலாக ஊட்டச்சத்து ஆலோசனைகளை வழங்குதல், கிராமப்புற செவிலியர்கள் வாயிலாக வயிற்றுப் போக்கு தடுப்புக்கான ஆரோக்கியமான முறை, கை கழுவுதல் உள்ளிட்டவை  குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொது சுகாதார செவிலிய அதிகாரி  கீதா  தலைமையில், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் தயாரித்த சத்து மாவு உருண்டை வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக புதுவை அரசின் குடும்ப நலத் துணை இயக்குநர் அல்லிராணி கூறியதாவது:
உடலில் இரும்புச் சத்து குறைந்தால் ரத்த சோகை ஏற்படும். இதனால் பல்வேறு உடல் உபாதைகள் உண்டாகும். ரத்த சோகை வராமல் தடுக்க கேழ்வரகு, முளைக்கட்டிய பயிறு வகைகள்,  வெல்லம், பேரிச்சம் பழம், புதினா, கீரை வகைகள், கொத்தமல்லி, சுண்டைக்காய், ஆட்டிறைச்சி ஆகியவற்றை உண்ண வேண்டும்.
எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய் ஆகியவற்றைச் சாப்பிடுவதாலும் ரத்த சோகையைத் தடுக்கலாம். 
மேலும், ஆண்டுக்கு இரண்டு முறை குடல்புழு நீக்க மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். பள்ளிகள் மற்றும் அனைத்துப் பகுதிகளில் வாரம் ஒரு முறை வழங்கப்படும் இரும்புச் சத்து மாத்திரைகளை தவறாமல் உள்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com