தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது: புதுவை ஆளுநர் கிரண் பேடி பெருமிதம்

தமிழ் மொழி உலக மொழியாகத் திகழ்ந்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.


தமிழ் மொழி உலக மொழியாகத் திகழ்ந்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புதுவை இலக்கியத் திருவிழா 2019 என்ற நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது:
புதுச்சேரி நகரம் பழங்காலத்தில் வேதபுரம் அல்லது வேதபுரி என்று அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 
வேதம், பண்பாடு ஆகியவற்றைக் கற்கும் இடமாக இந்த நகரம் விளங்கியது.
புதுச்சேரியில் இருந்து 12.5 கி.மீ. தொலைவில் உள்ள பாகூர் மூலநாதர் கோயில், 21 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்டார் கோயில் ஆகியவை புதுச்சேரியின் வேத பண்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. இங்கு, பழங்காலத்திலேயே சிவனை மக்கள் வழிபட்டுள்ளனர்.
வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகே கிடைத்த ஒரு கல்வெட்டின்படி, அகஸ்தீஸ்வரர் இங்குதான் வேதங்களைக் கற்றுக் கொண்டார் என்பது தெரிய வருகிறது. இதற்குப் பின்னர்தான் இந்த இடம் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.
6-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இங்கு வந்த போர்ச்சுகீசியர்களால் இந்த நகரம் புதுச்சேரியா என அழைக்கப்பட்டது. டச்சுக்காரர்கள் கடலோர நகரம் என தங்களது மொழியில் அழைத்தனர். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி என்று அழைத்தனர். 
இதற்கு தமிழில் புதிய கிராமம் என்று பொருள். அதன் பிறகு புதுச்சேரி என்ற வார்த்தை பாண்டிச்சேரியாக பிரபலமானது.
புதுச்சேரி இலக்கிய வரலாறு என்பது 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது. தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது.
இந்தியாவின் பண்டைய செம்மொழியான தமிழ் சமுதாயம், மதம் குறித்த மிகவும் மதிப்புமிக்க, நுண்ணறிவு மிக்க பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு பெரிய கருவூலத்தைக் கொண்டுள்ளது.
திருக்குறள், கம்ப ராமாயணம்  உள்ளிட்டவை உலக இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளாகும். 
இவை இந்திய இலக்கிய கிரீடத்தை அலங்கரிக்கும் வைரத்தை போன்றவை. மகாகவி பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வாழ்ந்த இல்லங்கள் இங்குள்ளன. எழுத்தாளர் பிரபஞ்சனும் இந்த புதுச்சேரி மண்ணில் உருவானவர்தான். அவரது படைப்புகளில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் புதுச்சேரியின் வரலாறு, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை.
புதுவையின் வரலாற்றை முழுமையாக அறிய வேண்டுமெனில், இங்குள்ள கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.
விழாவில் புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங், பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.ராஜா, வெங்கட்ட ரகோதம் உள்ளிட்ட பலர் கலந்து 
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com