மின் துறையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருக்கனூர் அருகே மின் துறையைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலையில் பந்தல் அமைத்து மறியலில் ஈடுபட்டனர்.


திருக்கனூர் அருகே மின் துறையைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலையில் பந்தல் அமைத்து மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி திருக்கனூர் அருகே சோரப்பட்டு, செல்லிப்பட்டு, வம்புபட்டு, விநாயகப்பட்டு ஆகிய கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக காலை முதல் மாலை வரை அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்வோர் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விவசாயத்துக்குத் தேவையான நீர் இரைக்கும் மோட்டார் இயக்க மின்சாரம் கிடைக்காத காரணத்தால்,  விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 
மேற்கண்ட கிராமங்களுக்கு வழக்கமான மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக தொண்டமாநத்தம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் அளிக்கப்படுவதால், பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மின் துறையைக் கண்டித்து சோரப்பட்டு பிரதான சாலையில் பந்தல் அமைத்து வெள்ளிக்கிழமை மறியலில் 
ஈடுபட்டனர். 
அப்போது, அறிவிக்கப்படாத மின் வெட்டைத் தடுக்க வேண்டும். மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு போதுமான அளவுக்கு மின்சாரம் விநியோகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வாதானூர் மின் துறை இளநிலைப் பொறியாளர் தாமரைச்செல்வன் தலைமையிலான மின் துறை ஊழியர்களும், திருக்கனூர் போலீஸாரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com