புதுவை பகுதியை ஆந்திரத்துக்கு தாரை வார்க்க ஆளுநர் முயற்சி: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்துக்குச் சொந்தமான பகுதியை ஆந்திரத்துக்கு தாரை வார்க்க முயற்சி செய்யும் கிரண் பேடி புதுவையின் துணைநிலை ஆளுநராக இருக்கத் தகுதியற்றவர் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.


புதுவை மாநிலத்துக்குச் சொந்தமான பகுதியை ஆந்திரத்துக்கு தாரை வார்க்க முயற்சி செய்யும் கிரண் பேடி புதுவையின் துணைநிலை ஆளுநராக இருக்கத் தகுதியற்றவர் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் கிரண் பேடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுவை சென்னை  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆளுநர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை 3 முறை விசாரணை நடைபெற்றது. கடைசியாக வியாழக்கிழமை (செப். 26) மனு விசாரணைக்கு வந்த போது, ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் 30.4.2019-இல் வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என வாதிட்டனர். 
ஆனால், இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு தில்லி முதல்வர் - ஆளுநர் இடையிலான அதிகாரம் குறித்த வழக்கில், தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனத் தீர்ப்பளித்தது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவைக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது என நீதிமன்றம் மீண்டும் தெளிவாகக் கூறியுள்ளது.
புதுவை அரசை முடக்கும் ஆளுநர் கிரண் பேடியின் முயற்சி நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி ஆளுநர் கிரண் பேடி அதிகாரிகளைக் கூட்டி கூட்டம் நடத்தி, தன்னிச்சையாக உத்தரவிட்டாலோ, விதிகளை மீறி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினாலோ, அதிகாரிகளை வாய்மொழியாகக் கட்டாயப்படுத்தினாலோ நானே (முதல்வர்) நீதிமன்றத்தில் ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுப்பேன்.
ஆளுநர் கிரண் பேடி இலவச அரிசியை வழங்குவதற்கான கோப்பு, வாரியத் தலைவர்கள் நியமனம் உள்பட 4 முக்கிய கோப்புகளை நிறுத்தி வைத்துள்ளார்.
ஆளுநரின் மக்கள் விரோத, புதுவை வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை ஒரு போதும் அரசோ, மக்களோ ஏற்கமாட்டார்கள். 
புதுவை எல்லைக்குள் உள்ளது ஏனாம். ரங்கசாமி முதல்வராக இருந்த போது, இது சுற்றுலாத் தலமாக உருவாகக்கப்பட்டது. இது ஆந்திரத்துக்குச் சொந்தமான பகுதி என தனி நபர் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் அதிகாரிகள் ஆஜராகும் போது, இந்தப் பகுதி புதுவைக்குச் சொந்தமில்லை; ஆந்திரத்துக்குச் சொந்தமானது எனக் கூறும்படி வாய்மொழியாக ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் ஆந்திரத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதை ஏற்க இயலாது. அவர், இனிமேல் புதுவையின் துணைநிலை ஆளுநராகச் செயல்படும் தகுதியை இழந்துவிட்டார்.
எனவே, கிரண் பேடியின் இந்த நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com