வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கு முன்பாகவே பிரசாரத்தை தொடங்கிய முன்னாள் எம்எல்ஏ

காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.நேரு தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை

காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.நேரு தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தல் அக். 21-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அந்தக் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.ஜான்குமார் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவது என்பதில் அதிமுக, பாஜக இடையே குழப்பம் நிலவியது. ஆனால், என்.ஆர் காங்கிரஸ் மெளனமாக இருந்து வந்த நிலையில், செப். 26-ஆம் தேதி சென்னைக்கு சென்ற அந்தக் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், காமராஜர் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என அதிமுக தலைமை அறிவித்தது. அன்றைய தினமே இடைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.நேரு நிறுத்தப்படலாம் என்ற தகவலும் வெளியானது. 
அதே நேரம், பாஜகவிடம் ஆலோசனை செய்யாமல் முடிவு எடுக்கப்பட்டதால், என்.ஆர்.காங்கிரஸ் மீது பாஜக அதிருப்தி அடைந்து, தலைமை முடிவுக்காக காத்திருகிறது. மேலும், விருப்ப மனு அளித்தவர்களிடம் பாஜகவினர் நேர்காணல் நடத்தினர். இதனால், என்.ஆர் காங்கிரஸ், பாஜக இடையே குழப்பம் நிலவியது.
இந்த நிலையில், இவ்விரு கட்சிகளும் தனித் தனியே போட்டியிடுமா அல்லது என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக தனது முடிவை அறிவிக்குமா என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில், மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (செப். 30) முடிகிறது. இதுவரை 3 பேர் மட்டுமே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதி நாளான திங்கள்கிழமை தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
இந்த நிலையில், வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கு முன்பாகவே காமராஜ் நகர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. நேரு மகாளய அமாவாசையான சனிக்கிழமை முக்கிய நபர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். 
முன்னதாக, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயிலுக்கு வந்த அவர், அங்கு சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக காமராஜ் நகர் தொகுதி சனி மூளையான சாமிப்பிள்ளைத் தோட்டம் வார்டுக்கு உள்பட்ட லெனின் நகருக்குச் சென்ற நேருவுருக்கு, அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அங்கு முக்கிய நபர்களைச் சந்தித்த அவர், ஆதரவு திரட்டினார். சந்திப்புக்குப் பின்னர், அங்கிருந்த நேரு புறப்பட்டு சென்றார். பிரசாரத்தை தொடங்கி ஆதரவு திரட்டிய நிலையில் என்.ஆர் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நேரு போட்டியிடுவாரா அல்லது வேறு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com