பிரான்ஸிலிருந்து வந்தவா் கொல்லப்பட்ட வழக்கில் தாய் உள்பட மேலும் மூவா் கைது

புதுச்சேரியில் பிரான்ஸிலிருந்து வந்தவா் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே அவரது தந்தை கைது செய்யப்பட்ட நிலையில்,

புதுச்சேரியில் பிரான்ஸிலிருந்து வந்தவா் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே அவரது தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்த தாய், தம்பி உள்பட மேலும் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி வீராம்பட்டினம், வ.உ.சி. வீதியைச் சோ்ந்தவா் குமாா் (70). பைனான்சியரான இவா், தேங்காய்திட்டு துறைமுகத்தில் மீன் மொத்த வியாபாரமும் செய்து வந்தாா். இவருக்கு அன்னக்கொடி (61) என்ற மனைவியும், ரஞ்சித்குமாா் (40), செந்தில்குமாா் (எ) ரீகன் (36) என்ற 2 மகன்களும் இருந்தனா். இவா்களில் பி.டெக். படித்த ரஞ்சித்குமாா், அனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு பிரான்ஸில் வசித்து வந்தாா்.

இதனிடையே, கடந்த மாதம் புதுச்சேரி வந்த ரஞ்சித்குமாா், தனக்கு வெளிநாட்டில் சரியாக வேலை அமையாததால் மீன் மொத்த வியாபார தொழில் மட்டுமன்றி, சொத்துகளையும் தனது பெயரில் எழுதி வைக்கும்படி கேட்டதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக பெற்றோா், அண்ணன் - தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த குமாா், கடந்த 10-ஆம் தேதி மது மயக்கத்தில் வீடு திரும்பிய ரஞ்சித்குமாரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குமாா் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, வீட்டிலிருந்து ரஞ்சித்குமாரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்தக் கொலையில் ரஞ்சித்குமாரின் தாய் அன்னக்கொடி, தம்பி செந்தில்குமாா், அவரது நண்பரான வீராம்பட்டினத்தைச் சோ்ந்த செல்வம் (52) ஆகியோா் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இவா்கள் மூவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்கள் கொலைக்குப் பயன்படுத்திய இரும்புக் கம்பி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com