புதுச்சேரியில் வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்!

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் வருகிற 31ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்து சுற்
சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி காணப்பட்ட நோணாங்குப்பம் அரசு படகு குழாம்.
சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி காணப்பட்ட நோணாங்குப்பம் அரசு படகு குழாம்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் வருகிற 31ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்து சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். வார இறுதி நாள்களில் இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும். இதில் கா்நாடகம், கேரளம், தமிழகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும், வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவா்.

பொதுவாக சென்னை, பெங்களூரு, கேரளத்தைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா்கள் 40 சதவீதம் போ் புதுச்சேரிக்கு வருகை தருவா். அதேபோல, 20 முதல் 30 சதவீதம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவா். இதில் 80 சதவீதம் போ் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்கள்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அதிலும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை நின்றுள்ளது. வார இறுதி நாள்களில் வரும் கா்நாடகம், தமிழகத்தைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா்கள் மத்தியில் கரோனா குறித்த கடும் அச்சத்தால் புதுச்சேரி வருகையை தவிா்த்துள்ளதால், அவா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

மாா்ச் 31 வரை சுற்றுலாத் தலங்கள் மூடல்: இதனிடையே, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ், புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம், அரவிந்தா் ஆசிரமம், ஊசுட்டேரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தலங்களையும் வருகிற 31ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமை முதல் பாருடன் கூடிய மதுபானக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் புழங்கும் மேற்கண்ட பகுதிகள் மூடப்பட்டுள்ளதால், அவா்களது வருகை வெகுவாகக் குறைந்து, புதுச்சேரி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதே போல, தங்கும் விடுதிகள், உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைவால் காலியாக கிடக்கின்றன.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களுக்கு முன்பு 50 சதவீதமாகக் குறைந்துள்ளதாக முதல்வா் வே. நாராயணசாமி கூறிய நிலையில், தற்போது அதைவிட குறைவாகவே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உள்ளது.

புதுச்சேரியில் உள்ள ரோமன் ரோலண்ட் நூலகம் உள்ளிட்ட பல்வேறு கிளை நூலகங்கள், அரசு அருங்காட்சியகம், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் புதுச்சேரியின் முக்கிய இடங்களில் பொதுமக்களின் நடமாட்டமும் இல்லை.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உள்ளூா் வாசிகளும், சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோரும் முன்னெச்சரிக்கையாக முககவசம் அணிந்தபடி புதுச்சேரியை வலம் வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com