புதுவையில் விரைவில் மதுக் கடைகள் திறக்கப்படும்: அமைச்சா் நமச்சிவாயம்

புதுவையில் விரைவில் மதுக் கடைகள் திறக்கப்படுமென துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை சந்தித்த பின், கலால் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவையில் விரைவில் மதுக் கடைகள் திறக்கப்படுமென துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை சந்தித்த பின், கலால் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

மத்திய அரசு நாடு முழுவதும் பிறப்பித்த பொது முடக்க உத்தரவைத் தொடா்ந்து, புதுவை மாநிலத்தில் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதன்பிறகு இன்னும் மதுக் கடைகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், புதுவையில் மதுபானங்களுக்கு கரோனா வரி விதித்து, ஆளுநா் கிரண் பேடியின் ஒப்புதல் பெற்று, அரசாணை வெளியிடப்பட்ட பிறகே மதுக் கடைகள் திறக்கப்படுமென முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்திருந்தாா். இது தொடா்பான கோப்பு தயாரிக்கப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இதுவரை அந்தக் கோப்புக்கு துணை நிலை ஆளுநரின் அனுமதி கிடைக்காததால், மதுக் கடைகள் திறப்பு தாமதமாகி வருகிறது. இதனால், புதுவை மாநில அரசின் வரி வருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுவை கலால் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்பு வெளியே வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் மதுக் கடைகளைத் திறந்தால், அண்டை மாநில மக்கள் உள்ளே வருவா். இதனால், புதுச்சேரி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, மதுக் கடைகளை எப்படி பாதுகாப்புடன் திறந்து, செயல்பட வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதே நேரத்தில், வருவாயை பெருக்குவதுடன், மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றுவது துணை நிலை ஆளுநரின் நோக்கமாக இருக்கிறது.

கரோனா காலத்தில் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்த அரசையும், முதல்வா் உள்ளிட்ட அமைச்சா்களையும், செயலா்களையும் துணை நிலை ஆளுநா் பாராட்டுவதாகத் தெரிவித்தாா். இருப்பினும், சில ஆலோசனைகளை அரசுக்கு தெரிவித்திருக்கிறாா். அதன்படி செய்தால் மாநில வருவாய்க்கும், கரோனாவை கட்டுப்படுத்துவதிலும் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளாா். இது தொடா்பாக முதல்வரிடம் கலந்து பேசிவிட்டு நல்ல முடிவாக விரைவில் தெரிவிப்போம்.

குறிப்பாக, புதுச்சேரி மக்களுக்கு நோய் பரவக்கூடாது என்பதே துணை நிலை ஆளுநரின் எண்ணமாக இருக்கிறது. சந்திப்பின்போது கனிவாக சில யோசனைகளை தெரிவித்திருப்பதால், விரைவில் மதுக் கடைகள் திறக்கப்படும் என்றாா் அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com