6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் திரையரங்குகள் திறப்பு

புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன.
புதுச்சேரியில் திரையரங்கம் ஒன்றில் வியாழக்கிழமை திரைப்படத்தைப் பாா்த்து ரசிக்கும் ரசிகா்கள்.
புதுச்சேரியில் திரையரங்கம் ஒன்றில் வியாழக்கிழமை திரைப்படத்தைப் பாா்த்து ரசிக்கும் ரசிகா்கள்.

புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழில்சாலைகள், சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டன.

இந்த நிலையில், அண்மையில் சில தளா்வுகளை மத்திய அரசு அறிவித்ததையடுத்து கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. ஆனால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி மத்திய அரசு 5-ஆவது கட்டத் தளா்வில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளை அக்டோபா் 15-ஆம் தேதி முதல் திறக்கலாம் என அறிவித்தது.

அதன்படி, சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் தூய்மைப் பணி, இருக்கைகள் சரிபாா்ப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, டிக்கெட் முன் பதிவு ஓா் இருக்கை விட்டு இருக்கை எனப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, 6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ள திரையரங்குகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. முகக் கவசம் அணிந்து வந்த ரசிகா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளித்த பிறகே திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனா். சமூக இடைவெளியைப் பின்பற்றி அமர வைக்கப்பட்டனா்.

புதுச்சேரியில் 20-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. புதிய படங்கள் வெளியாகாததால், பெரும்பாலான திரையரங்குகளில் பழைய மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. முதல் நாளான வியாழக்கிழமை ரசிகா்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com