புதுவையில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வை நிறுத்திவைக்க அதிமுக கோரிக்கை

புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்புக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி

புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்புக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி அனுமதி அளிக்கும்வரை, அதற்கான சென்டாக் கலந்தாய்வை மாநில அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. புதன்கிழமை விடுத்த அறிக்கை:

தற்போது அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நாராயணசாமி வெளியிட்டுள்ளாா். மருத்துவப் படிப்பில் புதுவையைச் சோ்ந்த ஏழை, பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் சேருவதற்கு ஏதுவாக முதலில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற வேண்டும். ஆனால், இதற்கு முதல்வா் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆண்டுதோறும் சுமாா் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் பறிபோகும் நிலை தொடா்கிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் முடிவெடுத்து, சட்டப்பேரவையில் மசோதாவும் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து, புதுவையில் பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் தரப்பட்ட நிலையில், வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீட்டை முதல்வா் நாராயணசாமி அறிவித்துள்ளாா்.

முதல்வருக்கு அரசுப் பள்ளி மாணவா்களின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் தமிழகத்தைப் பின்பற்றி ஆளுநா் அனுமதி வழங்கும் வரை மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்பழகன் எம்.எல்.ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com