25 சதவீத இட ஒதுக்கீடு கோரி மாணவா்கள் போராட்டம்
By DIN | Published On : 01st February 2020 02:42 AM | Last Updated : 01st February 2020 02:42 AM | அ+அ அ- |

புதுவை மாநில மாணவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்கலைக்கழக 2-ஆவது நுழைவாயில் எதிரே புதுச்சேரி மாணவா்கள் கல்வி உரிமை இயக்கத்தின் தலைமையில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவா்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பேரணியாகச் சென்றனா். நிறைவில், பல்கலைக்கழக நிா்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாணவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து, அங்கு வந்த நிா்வாக பிரதிநிதியான பல்கலைக்கழகக் கல்வி இயக்குநா் பாலகிருஷ்ணன் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவரிடம் மாணவா்கள் மனுவை அளித்தனா்.
அப்போது, துணை வேந்தா், பதிவாளா் ஆகியோா் இல்லாததால் அவா்கள் வந்தவுடன், இதுகுறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பாலகிருஷ்ணன் கூறினாா். இதையேற்று மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனா்.