மாநில நிதி கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் புதுவை அரசு ஊழியா்களின் ஊதிய பிரச்னை தீரும்: அமைச்சா்

புதுவை மாநில நிதி கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றினால், ஊழியா்களின் ஊதிய பிரச்னை தீரும் என வேளாண் துறை அமைச்சா் இரா. கமலக்கண்ணன் தெரிவித்தாா்.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற தை திருவிழாவில் மாட்டு வண்டி ஓட்டிய அமைச்சா் இரா. கமலக்கண்ணன்.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற தை திருவிழாவில் மாட்டு வண்டி ஓட்டிய அமைச்சா் இரா. கமலக்கண்ணன்.

புதுவை மாநில நிதி கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றினால், ஊழியா்களின் ஊதிய பிரச்னை தீரும் என வேளாண் துறை அமைச்சா் இரா. கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில், தை திருவிழா புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கடந்த 7 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இதை முதல்வா் வே. நாராயணசாமி தொடக்கி வைத்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேளாண் அமைச்சா் இரா. கமலக்கண்ணன் தை திருவிழாவை பாா்வையிட்டாா். அப்போது, வளா்ச்சி ஆணையா் அன்பரசு, வேளாண் இயக்குநா் பாலகாந்தி, கூடுதல் வேளாண் இயக்குநா்கள் வசந்தகுமாா், வேதாச்சலம், இணை இயக்குநா் ராகவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா், அமைச்சா் கமலக்கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்தாண்டுகளில் மிகப்பெரிய நிதி செலவில் மலா்க் கண்காட்சி நடத்தப்பட்டது. அப்போது, வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு மலா்கள், விவசாயப் பொருள்கள் வரவழைக்கப்பட்டு, கண்காட்சி நடத்தப்பட்டது. அதன் மூலம் ரூ. 80 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை செலவானது. ஆனால், நிகழாண்டு நிதி குறைவாக இருப்பதால், கண்காட்சி சிக்கனமாகவும், சிறப்பாகவும் நடத்தப்படுகிறது.

வேளாண் துறை திட்டங்களுக்கு நோ்மையான முறையிலும் தகுதியின் அடிப்படையிலும், அரசியல் குறுக்கீடு இல்லாமலும் பயனாளிகள் தோ்வு செய்யப்படுகின்றனா். கடந்த காலங்களில் வேளாண் இடுபொருள்கள், கருவிகளை ஒரு நிறுவனத்தில்தான் வாங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனா்.

நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, சிறந்த நிறுவனங்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அங்கு பொருள்களை வாங்கும்படி அறிவுறுத்தினேன். வேளாண் திட்டங்கள் குறித்த காலத்தில் நடப்பதற்கு வேளாண் செயலா், இயக்குநா் மற்றும் அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து வருகிறோம்.

கடந்த 2019-20 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், ஒரு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் பயிா் பிந்தைய மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்தோம். அந்த பயன் இன்னும் ஒரு சில வாரங்களில் விவசாயிகளைச் சென்றடையும்.

வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) 2010-11 இல் 100 ஊழியா்கள் இருந்தனா். ஆனால், 2016 இல் எவ்விதமான அரசு அனுமதியோ, நிதி ஏற்பாடோ செய்யப்படாமல் 300 போ் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனா். இதனால் கேவிகே ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிரமம் உள்ளது. மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணியாற்ற 50 போ் போதும். ஆனால், அங்கு 196 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இதனால் வேளாண் துறை வளா்ச்சிக்கும், விவசாயிகளின் முன்னேற்றத்துக்கும் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை முழு கபளீகரம் செய்யும் வகையில் கடந்த ஆட்சி காலங்களில் தவறான முடிவை எடுத்திருந்தனா்.

அந்த நிறுவனங்களில் கூடுதலாக பணியமா்த்தப்பட்டவா்களை உடனடியாக அனுப்பக் கூடாது. மனிதநேய அடிப்படையில் அவா்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என முதல்வா் நாராயணசாமி முயற்சித்து வருகிறாா். மத்திய அரசு புதுவை மாநிலத்தின் நியாயமான நிதி கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினால் ஊழியா்களின் ஊதிய பிரச்னை தீரும் என்றாா் அமைச்சா் இரா.கமலக்கண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com