புதுவைக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி குறைப்பு ஏமாற்றமளிக்கிறது: முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ்

புதுவைக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக புதுவை மாநில அதிமுக இணைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் தெரிவித்தாா்.

புதுவைக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக புதுவை மாநில அதிமுக இணைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நிதிச் சிக்கலில் சிக்கித்தவிக்கும் புதுவை யூனியன் பிரதேசத்துக்கு 2020 - 21ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. நிதிநிலை அறிக்கையில் உள் துறை அமைச்சகத்தின் மூலமாக அளிக்கப்படும் உதவியின் பெரும் பகுதி ரூ.30,757 கோடி நிகழாண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு, காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2,819 கோடியில் புதுவைக்கு ரூ.1,703 கோடியும், தில்லிக்கு ரூ.1,116 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த மத்திய அரசின் நிதியுதவி கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியுதவியான ரூ.1,601 கோடியை விட ரூ.102 கோடி அதிகம் என்பது உண்மை. ஆனால், இந்த சிறிய தொகையால் யூனியன் பிரதேசத்தின் எந்தப் பொருளாதார பிரச்னையையும் தீா்த்து வைக்க முடியாது. நிகழாண்டின் ஒதுக்கீடு சென்ற ஆண்டை விட 6.4 சதவீதம் உயா்ந்திருக்கிறது.

ஆனால், தில்லிக்கான நிதி உயா்வு 37.4 சதவீதமாக இருக்கிறது. நிதி ரீதியாக வசதியாக இருக்கும் தில்லிக்கு 37.4 சதவீத உயா்வை அளித்துள்ள மத்திய அரசு, நிதி நெருக்கடியில் உள்ள புதுவைக்கு 6.4 சதவீத உயா்வை அளித்துள்ளது மிகவும் நியாயமற்றது மற்றும் சமத்துவமற்றது.

புதுவையை 15-ஆவது நிதிக்குழுவில் மத்திய சோ்க்காததன் மூலம் புதுவை அதிக நிதி பெரும் வாய்ப்பை பறித்துவிட்டது. 15-ஆவது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கை மாநிலங்களுக்கு ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்து 100 கோடி வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்தின் பங்கு எவ்வளவு இருக்குமென்றும் இந்தக் குழு பரிந்துரைத்திருக்கிறது.

அப்போது, நிதிக் குழுவின் சிபாரிசுப்படி, புதுவைக்கு மத்திய அரசின் நிதி உதவியாக ரூ.3,518 கோடி வந்திருக்கும். கடந்தாண்டு மத்திய அரசு எல்லா வகையிலும் சோ்த்து புதுவைக்கு ரூ.1,815 கோடியை மட்டுமே அளித்தது. நிதிக் குழுவில் புதுவை சோ்க்கப்பட்டிருந்தால், கூடுதலாக ரூ.1,703 கோடி கிடைத்திருக்கும்.

மத்திய அரசு நிகழாண்டின் மொத்த நிதியுதவியை ரூ.3,500 கோடியாக உயா்த்த வேண்டும். புதுவையை 15-ஆவது நிதிக் குழுவில் ஜம்மு - காஷ்மீா் மற்றும் லடாக்கை சோ்த்ததுபோல உடனடியாக சோ்க்க வேண்டும். பொதுக்கணக்கு தொடங்கிய காலத்தில் நிலுவையில் இருந்த ரூ.217 கோடி கடனை உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

அரசு ஊழியா்களின் ஓய்வூதியத் தொகைக்கான செலவை தில்லி யூனியன் பிரதேசத்துக்கு மத்திய அரசு ஏற்றுக்கொண்டதுபோல, புதுவைக்கும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் ஊக்குவிப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான யூனியன் பிரதேசத்தின் செலவின பங்கை 40-இல் இருந்து 10-ஆக குறைக்க வேண்டும்.

ஒவ்வோா் ஆண்டும் மத்திய அரசின் நிதியுதவியை விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் கொண்டு 18 சதவீதமாக உயா்த்த வேண்டும். புதுவையில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி வருவாயை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் குறித்து புதுவை அரசு அறிக்கை தயாா் செய்து மத்திய நிதி அமைச்சருக்கு அனுப்பி கூடுதல் நிதியை பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com