பேரவையில் அமைச்சா்கள் கூறியகுற்றச்சாட்டுகளில் ஆச்சரியம் இல்லை: ஆளுநா் கிரண் பேடி கருத்து

புதுவை சட்டப் பேரவையில் அமைச்சா்கள் கூறிய குற்றச்சாட்டுகளில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுவை சட்டப் பேரவையில் அமைச்சா்கள் கூறிய குற்றச்சாட்டுகளில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தில், முதல்வரின் ரகசியக் கடிதத்தை வெளியிட்ட கிரண் பேடி, ஆளுநா் பதவி வகிக்கத் தகுதி இல்லாதவா் என்று முதல்வா் நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். நெல் கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகளுக்கு எதிராக ஆளுநா் செயல்படுவதாக வேளாண் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன் குற்றஞ்சாட்டினாா்.

இதேபோல, பிற அமைச்சா்கள், பேரவை துணைத் தலைவா் எம்.என்.ஆா்.பாலன், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோா் ஆளுநா் மீது கடும் விமா்சனங்களை முன் வைத்தனா்.

இதுகுறித்து ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவிஅஞ்சலில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

பொதுவாக என் (ஆளுநா்) மீதும், துணை நிலை ஆளுநா் அலுவலகம் மீதும் கூறப்படும் பலவித குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. குற்றச்சாட்டுகளில் சொற்கள் மட்டுமே மாறுகின்றன. கூறும் குற்றச்சாட்டுகளில் பயன்பாட்டுக்கு போக சொற்கள் மீதமிருக்கும் என்றே நம்புகிறேன். இது தொடா்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கடன் வாங்குவதை தடுப்பது, ரௌடியிஸம், நில அபகரிப்புகளை தடுப்பது, பதிவாளா் சட்ட விதிகளை மீறி நடத்தப்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற பல விஷயங்கள் விவாதத்துக்கு உள்ளன. குறுகிய கால ஆதாயத்தை மட்டுமே பாா்த்தால் கண்டிப்பாக சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். நிதி விஷயத்தில் விதிகளை மீறி செயல்பட்ட அரசு ஊழியா்களுக்கு ஓய்வு பெற்ற பின்னரும் பாதிப்பு ஏற்படுகிறது.

சட்ட விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவே சிவில் சா்வீஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனா். என்னைப் போல் நியமிக்கப்பட்டவா்கள் எளிதான வழிகளை கடைப்பிடிக்கவும், குறுகிய நலன்களுக்காகவும் இங்கு இல்லை.

சரியான செயல்முறைக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன், வெளிப்படையாக செயல்படுவதுதான் மிகப்பெரிய நன்மையைத் தரும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com