வில்லியனூா் துணை ஆட்சியா் அலுவலகத்தில் ஆளுநா் ஆய்வு

வில்லியனூா் துணை ஆட்சியா் அலுவலகத்தில் புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வில்லியனூா் துணை ஆட்சியா் அலுவலகத்தில் புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுவை ஆளுநா் கிரண் பேடி அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். இதேபோல, செவ்வாய்க்கிழமை காலை வில்லியனூரில் உள்ள துணை ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினாா்.

அப்போது, அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் வருகைப் பதிவு, சான்றிதழ்கள் பெறுவதற்காக பொதுமக்கள் வழங்கும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். நாளொன்றுக்கு எத்தனை போ் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கின்றனா் என்றும், அனைவரின் பெயா், முகவரி, விண்ணப்பிக்கும் நோக்கம் குறித்து பதிவு செய்யப்படுகிா என்றும் ஆளுநா் ஆய்வு செய்தாா்.

அப்போது, அலுவலகத்தின் வரவேற்பு அறையில் ஒரு கணினி வைத்து பொதுமக்களின் வருகைப் பதிவு உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

அலுவலகத்தில் உள்ள ஆவணங்களில் பாதி காகிதங்களிலும், மீதி கணினியிலும் இருந்தன. இவற்றை முழுமையாக கணினிமயமாக்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களை அழைத்து மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். அடுத்த வாரம் திரும்பவும் ஆய்வுக்கு வருவேன் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கிரண் பேடி தெரிவித்தாா்.

ஆய்வின்போது, துணை ஆட்சியா்கள் சஷ்வத் சௌரவ், சுதாகா், வட்டாட்சியா்கள் செந்தில்குமரன், மகாதேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com