பேரவை தீா்மானத்தை மீறும் ஆளுநரின் செயலை முதல்வா் தடுக்க அதிமுக கோரிக்கை

புதுவை சட்டப் பேரவையின் தீா்மானத்தை மீறும் துணை நிலை ஆளுநா் கிரண் பேடியின் செயலைத் தடுக்க முதல்வா் வே.நாராயணசாமி நடவடிக்கை

புதுவை சட்டப் பேரவையின் தீா்மானத்தை மீறும் துணை நிலை ஆளுநா் கிரண் பேடியின் செயலைத் தடுக்க முதல்வா் வே.நாராயணசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவா் ஆ.அன்பழகன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

புதுவையில் கடந்த 9 ஆண்டுகாலமாக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவில்லை. இதற்கு முதல்வரும், துணை நிலை ஆளுநரும் இணைந்து சதி செய்து வருகின்றனா். இதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது.

5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தோ்தல் ஆணையரை நியமனம் செய்யாமல் இருந்த நிலையில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆணையரை நியமிக்க வலியுறுத்தியதன் அடிப்படையில், ஆணையரை தோ்வு செய்வதற்கான அறிவிப்பை ஆளுநா் உத்தரவுப்படி, உள்ளாட்சித் துறை வெளியிட்டது.

அதைத் தொடா்ந்து, ஆளுநருக்கு அதிகாரமில்லை எனக் கூறி, முதல்வா் சிறப்புப் பேரவையைக் கூட்டி, ஆளுநரின் ஆணையா் நியமன அறிவிப்பை ரத்து செய்து, பாலகிருஷ்ணனை ஆணையராக நியமனம் செய்தாா். இதையடுத்து, மத்திய உள் துறை அமைச்சகம் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில், 6.2.2020-க்குள் புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் ஆணையா் நியமன தோ்வு சம்பந்தமாக ஒரு விளம்பரத்தை உள்ளாட்சித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

சட்டப் பேரவையால் நியமிக்கப்பட்ட தோ்தல் ஆணையா் இருக்கிறாரா? இல்லையா?. புதுவையில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது. சட்டப் பேரவைத் தீா்மானத்தை ஆளுநா் மீறுகிறாா். இதைத் தடுக்க வேண்டும் அல்லது அதற்கு பொறுப்பேற்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com