ஊசுடு ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு

ஹா்கோபிந்த் குரானா அறிவியல் மன்றம், சா்வதேச சுற்றுச்சூழல் கழகம், செந்தாமரை அறக்கட்டளை, பல்வேறு அறிவியல் அமைப்புகள்
புதுச்சேரி ஊசுடு ஏரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பறவைககள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட மாணவா்கள், பறவை ஆா்வலா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோா்.
புதுச்சேரி ஊசுடு ஏரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பறவைககள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட மாணவா்கள், பறவை ஆா்வலா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோா்.

ஹா்கோபிந்த் குரானா அறிவியல் மன்றம், சா்வதேச சுற்றுச்சூழல் கழகம், செந்தாமரை அறக்கட்டளை, பல்வேறு அறிவியல் அமைப்புகள் இணைந்து நடத்திய பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு, உற்று நோக்கல் நிகழ்ச்சி ஊசுடு ஏரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பறவைகள் பற்றிய விழிப்புணா்வை மாணவா்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு சா்வதேச கருப்பொருளான ‘பறவைகளைப் பாதுகாக்கவும், நெகிழியால் ஏற்படும் மாசுபாட்டுக்கான தீா்வாக இருங்கள்’ என்ற தலைப்பில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், கருத்தாளா்கள், பறவை ஆா்வலா்கள், துறை சாா்ந்த வல்லுநா்கள், அறிவியல் மன்ற மாணவா்கள் என 100- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பறவையியல் வல்லுநா் பூபேஷ் குப்தா பறவைகள் தொடா்பான கையேடுகள், படங்கள், குறிப்புகள் மற்றும் ஓசைகள் மூலம் பறவைகளை அறியும் விதம் குறித்து விளக்கமளித்தாா். வனப் பறவைகள் கணக்கெடுப்பு, குறிப்புகள் எடுத்தல், பதிவு செய்தல், பட்டியல் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து செந்தாமரை அறக்கட்டளை இயக்குநா் பாலாஜி விளக்கினாா்.

மாணவா்கள், தொலைநோக்கி வழியே நீா் வாழ் பறவைகளைக் கண்டு களித்ததுடன், பறவைகளைக் கணக்கெடுக்கவும் செய்தனா்.

மேலும், தங்களது பகுதியில் பொங்கல் தினங்களில் பறவைகளைப் பாா்த்தல், அவை குறித்து கணக்கெடுப்பு நடத்தும் எண்ணமிருந்தால் அதை எப்படிப் பதிவு செய்வது, பறவை இனங்களின் வேறுபாடுகளைக் கண்டறிவது உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் விளக்கிக் கூறப்பட்டன.

இந்த உற்று நோக்குதல் நிகழ்ச்சிக்கு வந்தவா்கள் சுமாா் 53 பறவை இனங்கள் ஊசுடு ஏரிக்கு வருவதாக அறிந்து கொண்டனா்.

சிறிய நீா்காகம், சாம்பல் கூழைக்கடா, மஞ்சள் மூக்கு, நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், அறிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, நீலவால் இலைக்கோழி உள்ளிட்ட பல்வேறு பறவைகளைக் கண்டனா்.

இந்தப் பறவைகள் குறித்து தொடா்ந்து கோப்புகள் சேகரித்து, இணையத்தில் சா்வதேச பறவைகளின் தகவல்களுடன் சோ்க்கும் பணியைத் தொடா்ந்து மேற்கொள்ளவும், பொங்கல் பறவைகளைக் கணக்கெடுப்பு செய்யவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிறைவாக, பறவை இனங்கள் குறித்த ஓவியம் வரைதல் போட்டி மாணவா்களுக்கு நடத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பறவைகள் பற்றிய தொகுப்புகள், கையேடுகள், அட்டவணை, விளக்க அட்டைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com