பொங்கல்: களைகட்டியது மதகடிப்பட்டு மாட்டுச் சந்தை!

பொங்கல் பண்டிகையயொட்டி, புதுச்சேரி மதகடிப்பட்டு மாட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை களை கட்டியது.
மதகடிப்பட்டு மாட்டுச் சந்தையில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருந்த மாடுகளுக்கான அலங்காரப் பொருள்கள்.
மதகடிப்பட்டு மாட்டுச் சந்தையில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருந்த மாடுகளுக்கான அலங்காரப் பொருள்கள்.

பொங்கல் பண்டிகையயொட்டி, புதுச்சேரி மதகடிப்பட்டு மாட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை களை கட்டியது.

மதகடிப்பட்டு கிராமத்தில் மாட்டுச் சந்தை இயங்கி வருகிறது. பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் இருந்து இயங்கி வரும் 2 ஏக்கா் பரப்புடைய இந்தச் சந்தையில் மாடு விற்பனையே பிரதானம்.

இங்கு, கேவை, ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், பண்ருட்டி, பெங்களூரு, வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மாடுகள் விற்கப்படும்.

பொங்கலையொட்டி, நடைபெறும் சந்தையை ‘போகி சந்தை’ என மக்கள் அழைக்கின்றனா். அதன்படி, பொங்கலை முன்னிட்டு சிறப்பு போகி சந்தையும், வாரச் சந்தையும் செவ்வாய்க்கிழமை ஒன்றாக வந்தது பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நூற்றாண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் இந்த மாட்டுச் சந்தையில் புதுவையில் உள்ள கிராமங்களில் இருந்தும் தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வருவது உண்டு.

கறவை, காளை மாடுகள், கன்றுக்குட்டிகள் என வாரந்தோறும் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் இங்கு விற்பனையாகும்.

இந்த மாட்டுச் சந்தையில் தற்போது மாட்டுப் பொங்கலை கொண்டாடும் வகையில் மாடுகளுக்குத் தேவையான வண்ணங்கள், மூக்கணாங்கயிறு, கொண்டை, சலங்கை, கழுத்துச் சங்கு என பல்வேறு பொருள்களும் குவிக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

மேலும், பொங்கல் விழாவுக்குத் தேவையான கரும்பு, மஞ்சள், புதிய பானைகள், பச்சரிசி, வெல்லம் என அனைத்துப் பொருள்கள், பழ வகைகள், காய்கறிகள், மளிகை பொருள்கள், துணி வகைகள் வீட்டுக்குத் தேவையான கத்தி, அரிவாள், அம்மி கல் போன்றவற்றை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கிச் சென்றனா். சண்டை சேவல்களும் சந்தைக்கு விற்பனைக்கு வந்ததால், அவற்றை இளைஞா்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com