கோப்புப்படம்
கோப்புப்படம்

தியாகிகளுக்கான ஓய்வூதியம் ஏப்ரல் முதல் ரூ.9,000 ஆக உயர்வு: புதுவை முதல்வர் அறிவிப்பு

துவையில் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.8,000-இல் இருந்து ரூ.9,000 ஆக ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்துள்ளார்.


புதுச்சேரி: புதுவையில் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.8,000-இல் இருந்து ரூ.9,000 ஆக ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரியில் செய்திமக்கள் தொடர்புதுறை சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

"புதுவையில் அரசு நிர்வாகத்தை முடக்கும் வேலைகளில் ஆளுநர் கிரண் பேடி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக அரசுக்கு தொல்லை கொடுத்து மாநில வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து வருகிறார்.  இதை மத்திய அரசும் தட்டிக்கேட்பதில்லை.  ஆனால், அதையெல்லாம் மீறி புதுவை அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் விருதுகளை தேசிய அளவில் பெற்றுள்ளோம். 6 மாதங்களுக்கு தேவையான இலவச அரிசிக்கான பணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. 

இலவச அரிசிதான் தொடர்ந்து வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நானே (முதல்வர்) வழக்குத் தொடர்ந்துள்ளேன்.

காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றப் பின்னர் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, சென்டாக் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றை ஒருபோதும் நிறுத்தியதில்லை. 

இப்போது தியாகிகள் 1,350 பேருக்கு மாதந்தோறும் ரூ.8,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதை ரூ.1,000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் முதல் ரூ.1,000 உயர்த்தி ரூ.9,000 ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான நிதி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

ரங்கசாமி ஆட்சியில் வாங்கிய கடன்களை கட்டியும், பல்வேறு இடையூறுகளை சந்தித்தும் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எந்த மாநிலத்திலாவது முதல்வர்,  அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் ஆளுநர் மாளிகை முன்பு தர்னா  நடத்தியதுண்டா?. புதுவையில் மட்டும் தான் போராட்டம் நடத்தினோம். 

பாஜகவுக்கு,  அதிமுக ஆதரவு அளித்து வரும் நிலையில், ஆளுநர் கிரண் பேடியை திரும்பப்பெறக்கோரி பிரதமர் மோடியிடம், அதிமுக வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும். புதுவையை பிடித்திருந்த சனி விரைவில் போகும்" என்றார் முதல்வர் நாராயணசாமி.

விழாவில், அதிமுக பேரவைக்குழுத் தலைவர் ஆ.அன்பழகன் பேசும்போது, "நான் முதல்வராக இருந்திருந்தால், ஆளுநர் கிரண் பேடி இதுபோல தொல்லை கொடுக்கும்போது நானாகேவே ராஜினாமா செய்திருப்பேன். மக்கள் மீது அக்கறை இருந்தால் முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார் அவர்.

விழாவில், செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் வினயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com